Published : 15 Mar 2021 03:11 AM
Last Updated : 15 Mar 2021 03:11 AM

முகேஷ் அம்பானி வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் - மும்பை காவல் துறை அதிகாரி சச்சின் வாஸ் கைது : சதியில் பங்கு இருப்பதாக என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்புதல்

மும்பை

தொழிலதிபர் முகேஷ் அம்பானி வெடிகுண்டு மிரட்டல் வழக்கு தொடர்பாக மும்பை காவல் துறை அதிகாரி சச்சின் வாஸை என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த சதியில் தனக்கு பங்கு இருப்பதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமாக மும்பையில் உள்ள ‘ஆன்டிலியா’ வீட்டுக்கு அருகே கடந்த மாதம் 25-ம் தேதி ஸ்கார்பியோ கார் கேட்பாரற்று கிடந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் காரை சோதனையிட்டதில், வெடிமருந்துகளும் மிரட்டல் கடிதமும் இருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அந்தக் கார் தானே பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் மான்சுக் ஹிரன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. ஒரு வாரத்துக்கு முன்பு தனது கார் காணாமல் போய்விட்டதாக ஹிரன் கூறிய நிலையில், கடந்த 5-ம் தேதி அவரது உடல் ஒரு நீரோடையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே, தனது கணவர் சாவில் மும்பை காவல் உதவி ஆய்வாளர் சச்சின் வாஸுக்கு தொடர்பு இருப்பதாக ஹிரன் மனைவி புகார் கூறினார். மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹிரன் தனது காரை வாஸிடம் வழங்கியதாகவும் அவர் அந்தக் காரை பிப்ரவரி முதல் வாரத்தில் திருப்பிக் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், மும்பையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் சச்சின் வாஸிடம் அதிகாரிகள் நேற்று முன்தினம் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர். வாஸின் காரை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதில் சோதனை நடத்தி வருகின்றனர்.

சதியில் தொடர்பு

வாஸ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள என்ஐஏ அதிகாரிகள் நேற்றும் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், முகேஷ் அம்பானி வீட்டுக்கு அருகே இருந்த வெடிமருந்துகள் நிரப்பிய கார் நிறுத்தப்பட்டிருந்ததில் தனக்கும் சிறிய பங்கு இருந்ததாக வாஸ் ஒப்புக் கொண்டதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் சில காவல் துறை அதிகாரிகள், சிவசேனா பிரமுகர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாக வாஸ் கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, 4 காவல் துறை அதிகாரிகளுக்கு என்ஐஏ சம்மன் அனுப்பி உள்ளது.

இதனிடையே, சச்சின் வாஸுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ராம் கதம் வலியுறுத்தி உள்ளார். அதேநேரம், இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், வெடிமருந்துகள் நிரப்பிய கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் சச்சின் வாஸ் பயன்படுத்திய காவல் துறைக்கு சொந்தமான இன்னோவா காரும் நின்றிருந்தது சிசிடிவி காட்சியில் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

முன்னதாக, நேற்று முன்தினம் விசாரணைக்காக என்ஐஏ அலுவலகம் செல்வதற்கு முன்பாக சச்சின் வாஸ், “என் மீது பொய் வழக்கு பதிவு செய்ய முயற்சி நடக்கிறது. இந்த உலகத்தை விட்டுச் செல்வதற்கான நேரம் நெருங்கிவிட்டது” என வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x