

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் சேலம் சின்ன திருப்பதியில் நேற்று நடந்தது. சேலம் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில தலைவர் ராமகிருஷ்ணன், பொதுச்செயலாளர் கணேசன், பொருளாளர் சங்கர ராமநாதன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின்னர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘தமிழ்நாடு பிராமணர் சங்கத்தினர் ஜாதி, இன பாகுபாடின்றி தமிழகத்தில் பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் உறுதுணையாகவும் இருக்கின்றனர். சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் எந்த கட்சியும் சாராமல் இருந்து வருகின்றனர். தேர்தலில், மக்களுக்கு சேவையாற்றும் கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கி, தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஆதரவு தெரிவித்து வருகிறது. அதன்படி, தற்போது அதிமுக தலைமையிலான ஆட்சி, தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே, வரும் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.