Published : 14 Mar 2021 03:14 AM
Last Updated : 14 Mar 2021 03:14 AM

ரயில்கள், ரயில் நிலையங்களில் உள்ள - குறைபாடுகளை களைய அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை : சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள சேவை குறைபாடுகள், விதிமீறல்களைக் களைய ரயில்வே அதிகாரிகளோ அல்லது ரயில்வே பாதுகாப்பு படையினரோ அக்கறை காட்டுவதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தவறி விழுந்து இருவர் உயிரிழப்பு

ரயில் பயணம் செய்தபோது தவறி விழுந்து உயிரிழந்த கோவில்பட்டியைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் கண்ணன் மற்றும் ஆவடியைச் சேர்ந்த டிரைவர் பிரகாசம் ஆகியோரின் குடும்பத்தினர் தங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கைவிசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘‘இருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 8 லட்சத்தை 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு உத்தரவிட்டார்.

கரப்பான் பூச்சி, எலி தொல்லை

மேலும் நீதிபதி தனது உத்தரவில், ‘‘ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள குறைபாடுகளையும், விதிமீறல்களையும் களைய ரயில்வே அதிகாரிகளோ அல்லது ரயில்வே பாதுகாப்பு படையினரோ எந்த அக்கறையும் காட்டுவதில்லை. ரயில் பயணிகளுக்கான சேவை குறைபாடுகள் உடனுக்குடன் சரிசெய்யப்படுவதில்லை. கரப்பான் பூச்சி, எலி போன்றவற்றின் தொல்லையால் பயணிகள் உடல்நலக் குறைவுக்கு ஆளாக நேரிடுகிறது.

முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யாதோரும் பயணிக்கின்றனர். அவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினரோ அல்லது ரயில்வே ஊழியர்களோ தடுப்பதில்லை. ஓடும் ரயில்களில் கதவுகள் சரிவர மூடப்படுவதுஇல்லை. பெரும்பாலான ரயில்நிலையங்களில் உள்ள நடைமேடைகளின் இறுதியில் பலரும் சுமைகளுடன் தண்டவாளத்தைக் கடந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் ஏற்படும் விபத்து மற்றும் உயிர்பலிசம்பவங்களைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தண்டவாளத்தைக் கடக்க முற்படும்போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்க ரயில்வே நிர்வாகம் மறுப்பது ஏற்புடையதல்ல” என அதிருப்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x