Published : 14 Mar 2021 03:14 AM
Last Updated : 14 Mar 2021 03:14 AM

வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதற்கு முன்பாகவே வெடித்தது மோதல் : காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருதரப்பினர் போராட்டம் : வெளிப்படை தன்மை இல்லை என ஜோதிமணி எம்.பி. கடும் கண்டனம் :

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதற்கு முன்பாகவே, சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில தலைவரை எதிர்த்தும், ஆதரவு தெரிவித்தும் இருதரப்பினரும் நேற்று போராட்டம் நடத்தினர். வேட்பாளர் தேர்வில் வெளிப்படைத் தன்மை இல்லை என ஜோதிமணி எம்.பி.யும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுககூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு முடிந்துள்ளன. காங்கிரஸார் இடையேதேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுகடுமையான நெருக்கடி கொடுக்கப்படுவதால் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத், வேட்பாளர் தேர்வில் ஏராளமான குளறுபடிகள் நடந்து இருப்பதாக குற்றம்சாட்டி சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘‘காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர்களும், விசுவாசமாக இருந்தவர்களும் புறக்கணிக்கப்பட்டு உள்ளார்கள். மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்கள், சீட் தராவிட்டால் விலகி விடுவேன் என்று மிரட்டியவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார்கள்.

பல தலைவர்கள் கட்சிக்காக உழைக்காத தங்கள் பிள்ளைகளுக்கு சீட் வாங்கி இருக்கிறார்கள். ஒரு எம்.பி. தனதுமாமனாருக்கே சீட் வாங்கி இருக்கிறார். இப்படி இருந்தால், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும். தற்போது காங்கிரஸ் தயாரித்துள்ள பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. எனவே டெல்லி மேலிடம் இதில் தலையிட வேண்டும்’’ என்றார்.

இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை ஆதரித்து சத்தியமூர்த்தி பவனில், கட்சியின் சென்னை மேற்குமாவட்ட தலைவர் ரஞ்சன்குமார் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கூறும்போது, ‘‘தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உரிய முறையிலேயே வேட்பாளர் தேர்வை மேற்கொண்டு வருகிறார். விஷ்ணுபிரசாத், யாரோ ஒருவரின் தூண்டுதலின்பேரில், திட்டமிட்டு மாநில தலைவரின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக போராட்டத்தில் ஈடுபடுகிறார்’’ என்றார்.

இதற்கிடையே, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விஷ்ணுபிரசாத் எம்.பி மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் நேற்று மாலை கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கை குறித்து தலைமைக்கு தெரிவிப்பதாக கே.எஸ்.அழகிரி கூறியதைத் தொடர்ந்து விஷ்ணுபிரசாத் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

ஜோதிமணி எம்.பி. ஆவேசம்

இதேபோன்று, ஜோதிமணி எம்.பி. ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் தேர்வு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை இல்லை. செயல்முறை சார்ந்தும், அறிவியல் முறைப்படியும், முடிவுகள் அடிப்படையிலும் தொகுதிகள், வேட்பாளர்கள் தேர்வு நடைபெறவில்லை.

திமுக கூட்டணியில் தொகுதிகளை பெறுவது தொடர்பாக கட்சியின் உயர்மட்டக்குழுவை கூட்டி விவாதித்து இருக்க வேண்டும். திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் கட்சியின் குழுவே முறைப்படி அமைக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள, விரும்பிய தொகுதிகளை தருவதற்கு திமுக தயாராக இருந்தும், அதைக் கருத்தில் கொள்ளாமல், வேட்பாளர்களை முதலில் தேர்வு செய்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப திமுகவிடம் தொகுதிகள் வாங்கப்பட்டுள்ளன.

எனது தலைவர் ராகுல்காந்தி, பணம் உள்ளவர்களுக்கே வாய்ப்பு என நினைத்திருந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு வாய்ப்பே கிடைத்திருக்காது. நான் எம்.பியும் ஆகியிருக்க மாட்டேன்.

ஒரு தொகுதிக்கு வேட்பாளரை தேர்வு செய்ய தகுதியுள்ள 4 பேரை கட்சியின் தேர்வுக் குழு பரிந்துரைக்க வேண்டும். ஆனால், அக்குழு ஒரே ஒரு வேட்பாளரின் பெயரை மட்டும் பரிந்துரைப்பது எந்த வகையில் நியாயம்?

நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்தவர்கள், மக்களிடம் நேரடி தொடர்பில் உள்ளவர்கள், பெண்கள், சிறுபான்மையினர், இளைஞர்கள் ஆகியோருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஆனால், எவ்வித அளவுகோலையும் வேட்பாளர் தேர்வில் கருத்தில் கொள்ளாதது கட்சிக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக இதற்கு எதிராக குரல்கொடுத்து வருகிறேன். நிறைய தவறுகள் நடக்கின்றன. இதை தட்டிக் கேட்டும் பதிலில்லை. தொண்டர்களின் ரத்தத்தைக் குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலைகேட்கவில்லை. உண்மையான கட்சியின் விசுவாசிகளுக்கு கண்முன் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது ரத்தம் கொதிக்கிறது. இதுகுறித்து ராகுல்காந்தி கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளேன்.

இப்படி தொகுதிகளை தேர்வுசெய்துவிட்டு, தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி எண்ணிக்கை குறைவு என வருத்தப்பட்டுக் கொள்வதில் பலனில்லை. இந்தத் தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கின்றனர்.

எனது யுத்தத்தை தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல, துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமையும் நமக்கு உண்டு என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x