Published : 11 Mar 2021 03:12 AM
Last Updated : 11 Mar 2021 03:12 AM

திமுக கூட்டணியில் மதிமுக, முஸ்லீம் லீக் கட்சிகள் போட்டியிடும் தொகுதி இறுதியானது :

திமுக கூட்டணியில் மதிமுக, இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கான போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. திமுக அணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு 6, இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்வதற்கான பேச்சுவார்த்தையில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் நேற்று கையெழுத்திட்டனர். அதன்படி பல்லடம், மதுரை (தெற்கு), மதுராந்தகம், அரியலூர், சாத்தூர், வாசுதேவநல்லூர் ஆகிய 6 தொகுதிகளிலும் அதிமுகவை நேரடியாக எதிர்த்து உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடுகிறது.

மேலும், மதுராந்தகம் தொகுதியில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து திமுக- இந்திய முஸ்லிம் லீக் கட்சி இடையேயான தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் சிதம்பரம், கடையநல்லூர், வாணியம்பாடி ஆகிய தொகுதிகள் தரப்பட்டுள்ளன. இந்த 3 தொகுதிகளிலும் அதிமுகவை நேரடியாக எதிர்த்து முஸ்லிம் லீக் கட்சி தனி சின்னத்தில் போட்டியிட உள்ளதுகவனிக்கத்தக்கது. இதுதவிர ஆதித்தமிழர் பேரவைக்கு அவிநாசி (தனி),

மக்கள் விடுதலை கட்சிக்கு நிலக்கோட்டை ஆகிய தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் அவிநாசி தொகுதியில் ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் போட்டியிட உள்ளார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக சபாநாயகர் தனபால் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் ஏற்பட்ட இழுபறியால் வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 11) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதிமுக அறிவிப்பு

தொகுதிகள் இறுதியானதை அடுத்து, தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினர் இன்றும், நாளையும் (மார்ச் 11, 12) விருப்பமனு அளிக்கலாம் எனவும், பொதுத்தொகுதிக்கு ரூ.25,000-ம், தனித் தொகுதிக்கு ரூ.15,000-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x