Published : 10 Mar 2021 03:11 AM
Last Updated : 10 Mar 2021 03:11 AM

கொ.ம.தே.க.வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு - திமுக 174, கூட்டணி கட்சிகள் 60 தொகுதிகளில் போட்டி :

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு (கொ.ம.தே.க.) 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக 174 தொகுதிகளிலும், 11 கூட்டணி கட்சிகள் 60 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக நடைபெற்ற பேச்சில் இழுபறி நீடித்த நிலையில் நேற்றிரவு 7 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் சந்தித்தார். அப்போது கொ.ம.தே.க.வுக்கு 3 தொகுதிகளை ஒதுக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.ஆர்.ஈஸ்வரன், “திமுக கூட்டணியில் கொ.ம.தே.க.வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளனன. 3 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம். எந்தெந்த தொகுதிகள் என்பது புதன்கிழமை (இன்று) முடிவாகும். நாங்கள் போட்டியிடும் தொகுதிகள் மட்டுமல்லாது 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம். வரும் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும். மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி" என்றார்.

திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் - 25, மார்க்சிஸ்ட் - 6, இந்திய கம்யூனிஸ்ட் - 6, விசிக - 6, மதிமுக - 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 3, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி - 3, மனிதநேய மக்கள் கட்சி - 2, தமிழக வாழ்வுரிமைக் கட்சி - 1, ஆதித் தமிழர் பேரவை - 1, மக்கள் விடுதலைக் கட்சி - 1 என்று 11 கட்சிகளுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் திமுக 174 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

மதிமுக - 6, கொ.ம.தே.க. - 3, தமிழக வாழ்வுரிமைக் கட்சி - 1, ஆதித் தமிழர் பேரவை - 1, மக்கள் விடுதலைக் கட்சி - 1 , மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளில் 1 என கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 13 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளனர். எனவே, வரும் பேரவைத் தேர்தலில் 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.

கடந்த 5-ம் தேதி திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், “திமுக வேட்பாளர் பட்டியல் மார்ச் 10-ம் தேதியும், திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11-ம் தேதியும் வெளியிடப்படும்" என்று தெரிவித்திருந்தார். ஆனால், கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது இதுவரை இறுதி செய்யப்படவில்லை. நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் பேச்சு நடத்திய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், “முஸ்லிம் லீக்குக்கு கடந்த தேர்தலில் வென்ற கடையநல்லூர் தொகுதி உறுதியாகியுள்ளது. மற்ற 2 தொகுதிகள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம்" என்றார்.

தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானதும் அண்ணா அறிவாலயத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், “கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று (மார்ச் 10) முடிவாகும் என்றும், அதனை மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்" என்று தெரிவித்தார்.

எனினும, திமுக வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே அறிவித்தபடி இன்று வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக திமுக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, “கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு, எந்தெந்த தொகுதிகள் என்பது முடிவாகாததால் திமுக வேட்பாளர் பட்டியல் திட்டமிட்டபடி மார்ச் 10-ல் வெளியாகுவது சந்தேகம்தான். ஆனால், முதல் கட்டமாக மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட சிலர் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x