Published : 09 Mar 2021 03:11 AM
Last Updated : 09 Mar 2021 03:11 AM

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட்டுக்கு 6 தொகுதிகள் : 10 கட்சிகளுக்கு இதுவரை 57 இடங்கள் ஒதுக்கீடு :

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் கடந்த 1-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட், மதிமுகவுக்கு தலா 6 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

குறைந்தது 10 தொகுதிகள் வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிடிவாதமாக இருந்ததால் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன், பி.சம்பத் ஆகியோர் நேற்று காலை 11 மணியளவில் திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 6 தொகுதிகள் ஒதுக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கான ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலினும், கே.பாலகிருஷ்ணனும் கையெழுத்திட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: ஒவ்வொரு கட்சியும் தங்கள் பலத்துக்கேற்ப அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்புவது இயல்பானது. கடந்த பல தேர்தல்களில் மார்க்சிஸ்ட் போட்டியிட்ட தொகுதிகளோடு ஒப்பிடும்போது 6 இடங்கள் குறைவானது. இந்தத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேண்டிய அரசியல் அவசியம் ஏற்பட்டுள்ளது. எந்தவொரு சிறு பிரச்சினையும் திமுக கூட்டணியில் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும், அதிமுக - பாஜக கூட்டணிக்கு சிறு வாய்ப்பைக் கூட கொடுத்து விடக் கூடாது என்பதற்காகவும் 6 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டுள்ளோம்.

தமிழகத்தில் பாஜக காலூன்ற அனுமதித்து விடக்கூடாது என்பதற்காக திமுகவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். புதுச்சேரியில் 3 நியமன உறுப்பினர்களை வைத்துக் கொண்டு அங்கிருந்த காங்கிரஸ் ஆட்சியையே கலைத்து விட்டார்கள். புதுச்சேரி அனுபவத்தில் அதிக இடங்களில் வெற்றிபெற்று நிலையான ஆட்சி அமைக்க திமுக விரும்புகிறது. அதுபோல தமிழகத்தில் நடைபெறாமல் தடுக்க வேண்டிய கடமை மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் எம்.எல்.ஏ. தி.வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இரா.அதியமான் தலைமையிலான ஆதித் தமிழர் பேரவை, முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல் தலைமையிலான மக்கள் விடுதலைக் கட்சி ஆகிய 3 கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. இந்த 3 கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளன.

திமுக கூட்டணியில் இதுவரை 10 கட்சிகளுக்கு 57 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு திமுக 2 தொகுதிகள் தர முன்வந்த நிலையில் கொ.ம.தே.க. 3 தொகுதிகளைக் கேட்கிறது. இதனால் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ் தனக்கு ஒரு தொகுதி ஒதுக்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கடிதம் அளித்துள்ளார்.

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட சிலரும் திமுகவுடன் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x