Published : 08 Mar 2021 03:56 AM
Last Updated : 08 Mar 2021 03:56 AM

அதிமுக, பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் : நாகர்கோவில் தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா நம்பிக்கை

“தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானம் வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்குச் சென்றார். தாணுமாலய சுவாமி, ஆஞ்சநேயர் சந்நிதியில் தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “மக்கள் திரண்டு வந்து அளிக்கும் ஆதரவை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழகத்தில் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, அதிமுக, பாமக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறேன். கன்னியாகுமரியில் வீடுதோறும் தாமரை சின்னத்தை கொண்டு சேர்க்கும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளேன். இங்கு பொன் ராதாகிருஷ்ணன் அடுத்தகட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வெற்றியை நிலைநாட்டுவார்” என்றார்.

சுசீந்திரத்தில் ‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்’ எனும் பெயரில் வீடு, வீடாக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பாஜக கூட்டணிக்கு ஆதரவு திரட்டினார். பின்னர் நாகர்கோவில் வந்த அவர், இந்து கல்லூரி அருகே உள்ள நீலவேணியம்மன் கோயிலுக்குச் சென்றார்.

பின்னர் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொண்டார். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களை பார்த்து கையசைத்தவாறு வந்தார். வேப்பமூடு சந்திப்பை அடைந்ததும், அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உடனிருந்தனர்.

பிரச்சாரம் நிறைவடைந்ததும் வடசேரி உடுப்பி ஓட்டலில் தேர்தல் பணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஆயுதப்படை மைதானம் சென்ற அவர், மாலை 3.15 மணியளவில் ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x