Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM

2-வது இன்னிங்ஸில் 135 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி - இன்னிங்ஸ், 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது விராட் கோலி குழு

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது ஜூன் மாதம் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெற்று வந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் அக்சர் படேல் 4, அஸ்வின் 3 விக்கெட்களை கைப்பற்றினர்.

இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 94 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. புஜாரா 17, விராட் கோலி 0, அஜிங்க்ய ரஹானே 27, ரோஹித் சர்மா 49, ரவிச்சந்திரன் அஸ்வின் 13, ரிஷப் பந்த் 101 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 60, அக்சர் படேல் 11 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்தியஅணி 114.4 ஓவர்களில் 365 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அக்சர் படேல் 97 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதன் பின்னர் இஷாந்த் சர்மா, மொகமது சிராஜ் ஆகியோரை டக் அவுட்டில் வெளியேற்றினார் பென் ஸ்டோக்ஸ். இதனால் முதல் சதத்துக்கு 4 ரன்களே தேவைப்பட்ட போதிலும் வாஷிங்டன் சுந்தரால் அதை எட்ட முடியாமல் போனது.

174 பந்துகளை சந்தித்த வாஷிங்டன் சுந்தர் 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 96 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 4, ஆண்டர்சன் 3, ஜேக் லீச் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 160 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி அஸ்வின், அக்சர் படேலின் சுழலில் 54.5 ஓவர்களில் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஸாக் கிராவ் லி 5, ஜானி பேர்ஸ்டோ 0, டாம் சிப்லி 3, பென் ஸ்டோக்ஸ் 2, ஜோ ரூட் 30, போப் 15, பென் ஃபோக்ஸ் 13, டாம் பெஸ் 2, ஜேக் லீச் 2, லாரன்ஸ் 50 ரன்களில் நடையை கட்டினர். இந்திய அணி சார்பில் அஸ்வின் 5, அக்சர் படேல் 5 விக்கெட்களை வீழ்த்தினர். இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. ஆட்ட நாயகனாக ரிஷப் பந்த்தும், தொடர் நாயகனாக அஸ்வினும் தேர்வானார்கள்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 72.2 சதவீத புள்ளிகளுடன் முதலிடம் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி. வரும் ஜூன் 18-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூஸிலாந்துடன் மோதுகிறது.

அஸ்வின், அக்சர் படேல் சாதனை

அஸ்வின் இந்தத் தொடரில் 4 போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 32 விக்கெட்கள் வேட்டையாடினார். அஸ்வின் ஒரே தொடரில் 30 விக்கெட்களுக்கு மேல் கைப்பற்றுவது இது 2-வது முறையாகும். கடந்த 2015-ம்ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடரில் 31 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் இரு முறை 30 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் எனும் சாதனையை படைத்துள்ளார் அஸ்வின்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகமான அக்சர் படேல் 27 விக்கெட்கள் வீழ்த்தினார். இதன் மூலம் அறிமுக தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை இந்தியாவின் திலிப் தோஷியுடன் பகிர்ந்து கொண்டார் அக்சர் படேல். திலிப் தோஷி தனது அறிமுக தொடரில்6 ஆட்டங்களில் விளையாடி 27 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அதேவேளையில் குறைந்த டெஸ்ட் கொண்ட (3 போட்டி) தொடரில் இதற்கு முன்னர் இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் 2008-ல் இந்தியாவுக்கு எதிரான அறிமுக தொடரில் 26 விக்கெட்கள் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. இதனை தற்போது முறியடித்து சாதனை படைத்துள்ளார் அக்சர் படேல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x