Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகே உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: வேல்முருகன், சி.என்.ராமமூர்த்தி வலியுறுத்தல்

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என்று வன்னியர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சி.என்.ராமமூர்த்தியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகனும் தெரிவித்தனர்.

இதுகுறித்து சென்னையில் நேற்று இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கக் கோரி வன்னியர் அமைப்புகள் உள்ளிட்ட பலரும் போராடினர். ஆனால், பாமக நிறுவனர் ராமதாஸ், தான் மட்டுமே போராடிப் பெற்றதுபோல கூறுகிறார். வன்னியர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை மதிப்புக் குறைவாகவும் பேசுகிறார். இது கண்டிக்கத்தக்கது.

வன்னியர்களுக்கு மாநிலத்தில் 20 சதவீத இடஒதுக்கீடும், மத்தியில் 2 சதவீத இடஒதுக்கீடும் பெறும்வரை ஓயமாட்டேன் என்று உறுதியாக இருந்த ராமதாஸ், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கினால் போதும் என்று இறங்கி வந்துவிட்டார்.

இதனிடையே வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி வன்னியர் அமைப்புகள், வன்னியர் கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த பரிந்துரையை அரசு அமல்படுத்தாததால், உயர் நீதிமன்றத்தில் மீ்ண்டும் வழக்கு தொடரப்பட்டது. ஆணையத்தின் பரிந்துரையை 30 நாட்களில்அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகும் 5 ஆண்டுகளாக அரசாணை வெளியிடாமல் காலம் தாழ்த்தப்பட்டது. அதனால் நீதிமன்ற அவமதிப்புவழக்கு தொடர்ந்தோம்.

இந்நிலையில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 15 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க அரசு தயாராக இருந்த நிலையில், ராமதாஸ் தனது அரசியல் லாபத்துக்காக வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு என போலியாக ஒப்பந்தம் செய்துள்ளார். இதனால் தென் மாவட்ட மக்களுடன் தகராறு ஏற்படும் நிலைதான் உருவாகியுள்ளது.

இனி அமையவுள்ள புதிய அரசு, முதலில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தி, அதன்பேரில் அனைத்து சாதிகளுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் உரிய பங்கு கிடைக்கும் வகையில் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதை திமுக ஆட்சிக்கு வந்து நிச்சயம் செய்யும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x