Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM

ஆரோன் பின்ச் விளாசலில் : 4-வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி 20 கிரிக்கெட் ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.

வெலிங்டனில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஆரோன் பின்ச் 55 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் விளாசினார். கிளென் மேக்ஸ்வெல் 18, மார்கஸ் ஸ்டாயினிஸ் 19 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து சார்பில் இஷ் சோதி 3 விக்கெட்கள் கைப்பற்றினார்.

157 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 18.5 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கைல் ஜேமிசன் 30, டேவன் கான்வே 17, டிம் ஷெய்பர்ட் 17 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். ஆஸ்திரேலிய அணி சார்பில் கேன் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்களையும் ஆஷ்டன் அகர், ஆடம் ஸம்பா, கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை 2-2 என சமநிலையை அடையச் செய்துள்ளது. ஆட்ட நாயகனாக ஆரோன் பின்ச் தேர்வானார். இரு அணிகள் இடையிலான கடைசி ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.

ஆரோன் பின்ச் சாதனை..

4-வது டி 20 ஆட்டத்தில் 4 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் சர்வதேச டி 20 ஆட்டங்களில் 100 சிக்ஸர்களை விளாசிய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஆரோன் பின்ச். இந்த மைல் கல்லை தனது 70-வது ஆட்டத்தில் எட்டியுள்ளார் பின்ச்.

இந்த வகை சாதனையில் நியூஸிலாந்தின் மார்ட்டின் கப்தில் (135), இந்தியாவின் ரோஹித் சர்மா (127 சிக்ஸர்கள்), இங்கிலாந்தின் இயன் மோர்கன் (113), நியூஸிலாந்தின் காலின் மன்றோ (107), மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் (105) ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x