Last Updated : 06 Mar, 2021 03:13 AM

 

Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM

காங்கிரஸை அலட்சியப்படுத்துகிறது திமுக : செயற்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்ட கே.எஸ்.அழகிரி :

தமிழக காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. மேலிட பொறுப்பாளார் தினேஷ் குண்டுராவ், தேர்தல் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். படம்: க.பரத்

தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸை திமுக அலட்சியப்படுத்துவதாக கூறி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீருடன் தெரிவித்தார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இடம்பெற்று காங்கிரஸுக்கு கடந்த 2011-ல் 63 தொகுதிகளையும், 2016-ல் 41 தொகுதிகளையும் திமுக ஒதுக்கியது. வரும் பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சு கடந்த பிப்.25-ல் தொடங்கியது. காங்கிரஸ் சார்பில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோருடன் பேச்சு நடத்தினர்.

அப்போது கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளுக்கு தலா 4 தொகுதிகள் வீதம் 54 பேரவைத் தொகுதிகள் ஒதுக்குமாறு காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. ஆனால், ஒரு எம்.பி. தொகுதிக்கு 2 வீதம் 18 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று திமுக திட்டவட்டமாக கூறிவிட்டது.

அதனைத் தொடர்ந்து மார்ச் 1-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி, தொகுதிப் பங்கீடு குறித்தும் பேசியதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் திமுகவுடன் இரு கட்ட பேச்சு நடத்தினர். அதில் 22 தொகுதிகள் வரை தர திமுக முன் வந்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு எம்.பி. தொகுதிக்கு 3 வீதம் 27 தொகுதிகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று காங்கிரஸ் முடிவுக்கு வந்திருந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகளிடம் நேற்று முன்தினம் தினேஷ் குண்டுராவ் கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது 30 தொகுதிகளுக்கு குறைவாக பெறக் கூடாது. அப்படி பெற்றால் 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை திமுக குறைத்துவிடும் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் வெற்றிபெற்ற 8 எம்.பி. தொகுதிகளைக் கணக்கிட்டு 24 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று திமுக தரப்பில் காங்கிரஸுக்கு தகவல் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி, முன்னாள் மத்திய அமைச்சர் பள்ளம் ராஜூ, மகாராஷ்டிர மாநில அமைச்சர் நிதின் ராவத், திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய பலரும் 30 தொகுதிகளுக்கு குறைவாக பெறக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சின்போது நடைபெற்றதை கே.எஸ்.அழகிரி விவரித்துள்ளார். "சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட கட்சி, நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த கட்சி,50 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட கட்சி, நாட்டின் வளர்ச்சிக்கு காரணமான கட்சி காங்கிரஸ். ஆனால், தொகுதிப் பங்கீட்டில் அலட்சியப்படுத்தப்படுகிறது. தொகுதிகளை குறைவாக கூறுவது இயல்பான ஒன்றுதான். மரியாதை முக்கியம். பேச்சுவார்த்தைக்கு வந்த உம்மன் சாண்டி, முன்னாள் முதல்வர் மட்டுமல்ல, கேரளத்தின் முதல்வர் வேட்பாளர் ஆவார். ஆனால், அவரை திமுக மூத்த தலைவர்கள் நடத்திய விதம் அதிர்ச்சி அளித்தது" என்று கூறி அழகிரி கண்ணீர் விட்டதாக கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ஒருவர் 'இந்து தமிழ்' நாளிதழிடம் தெரிவித்தார்.

கே.எஸ்.அழகிரி கண்ணீர் விட்டது காங்கிரஸ் நிர்வாகிகளை வருத்தமடையச் செய்தது. கூட்டத்தில் பலரும் உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் திரண்டிருந்த காங்கிரஸ் மகளிரணியினர் உள்ளிட்ட தொண்டர்கள், 41 தொகுதிகளுக்கு குறைவாகப் பெறக் கூடாது என்று கூறி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். வீரப்ப மொய்லி செய்தியாளர்களிடம் பேசும்போது, “திமுகவுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். நாளை (மார்ச் 6) தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வரும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x