Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு : திமுக கூட்டணியில் 6 தொகுதி ஒதுக்கீடு : எண்ணிக்கையை விட லட்சியமே முக்கியம் என முத்தரசன் விளக்கம் :

திமுக உடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டு கையெழுத்திடப்பட்டது. அதற்கான ஒப்பந்தத்தை இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் காண்பித்தார். மக்களவை உறுப்பினர் சுப்பராயன், மாநில துணை பொதுச் செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி ஆகியோர் உடனிருந்தனர். படம்: ம.பிரபு

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி எண்ணிக்கையை விட கட்சிக்கு லட்சியமே முக்கியம் என அக்கட்சியின் மாநில செயலர் இரா.முத்தரசன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதனிடையே நேற்று மாலை திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் இரா.முத்தரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலர்கள் இ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலர் கே.சுப்புராயன் மு.வீரபாண்டியன், செயற்குழு உறுப்பினர் கோ.பழனிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த தேர்தல்மிக, மிக முக்கியமான தேர்தல். இதில் தொகுதிகளின் எண்ணிக்கையா, லட்சியமா என கேட்டால், லட்சியத்துக்கு தான் முதலிடம் கொடுக்கப்படும். வகுப்பு வாதத்துக்கு எதிராக களம் கண்ட, சாதி, மதவெறிக்கு இடமளிக்காத, சமூக நீதிக்காக போராடி வெற்றிபெற்ற மாநிலம் தமிழ்நாடு.

மற்ற கட்சிகளும் உறுதி செய்வார்கள்

இம்மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் வகுப்புவாத சக்திகள், தேர்தல் மூலமாக சில கட்சிகளின் பலவீனத்தை பயன்படுத்தி வலுவாக காலூன்றுவதற்குரிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார்கள். ஒரு பக்கம் பாஜக மற்றும் அதிமுக அணி, இவற்றால் உருவாக்கப்பட்ட வேறு ஒரு அணி ஆகியவற்றை எதிர்த்து போராடக் கூடிய திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி இத்தேர்தலில் வெற்றிபெற வேண்டியது அவசியம்.

அதனால் திமுகவோடு இணக்கமான முறையில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசி இன்று கையெழுத்திட்டிருக்கிறோம். டி.ஆர்.பாலு தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலர் கே.சுப்புராயன் தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவும் 2 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி 6 தொகுதிகள் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் வேண்டும் என்ற உத்தேசப் பட்டியலையும் பேச்சுவார்த்தை குழுவிடம் வழங்கி இருக்கிறோம். கூட்டணியில் உள்ள கட்சிகளும், கூட்டணியில் இருப்பதை உறுதி செய்வார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x