Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM

தங்கம், அமெரிக்க டாலர் கடத்தலில்பினராயி விஜயனுக்கு நேரடி தொடர்பு : கேரள உயர் நீதிமன்றத்தில் சுங்கத் துறை அறிக்கை தாக்கல்

தங்கம், அமெரிக்க டாலர் கடத்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நேரடி தொடர்பு உள்ளது என்று அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் சுங்கத் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கடந்த ஜூலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தக நகரான துபாயில் இருந்துதிருவனந்தபுரத்துக்கு விமானத்தில் 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் திருவனந்தபுரத்தில் இருந்து ஓமன் தலைநகர் மஸ்கட்டுக்கு ரூ.1.30 கோடி மதிப்புள்ளஅமெரிக்க டாலர்கள் கடத்தப்பட்டிருப்பதும் விசாரணையில் அம்பலமானது.

தங்க கடத்தல், அமெரிக்க டாலர் கடத்தல் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகதூதரகத்தின் முன்னாள் ஊழியரும் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறை அலுவலருமான ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஸ்வப்னாவுக்கு உதவியதாக கேரள தகவல் தொழில்நுட்பதுறை செயலாளர், முதல்வரின் முதன்மைசெயலாளராக பணியாற்றிய சிவசங்கர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார்.

இந்த வழக்குகளை தேசிய புலனாய்வு அமைப்பு, சுங்கத் துறை, அமலாக்கத் துறை ஆகியவை விசாரித்து வருகின்றன. தங்கம், டாலர் கடத்தல் தொடர்பாக சுங்கத் துறை ஆணையர் சுமித் குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். அதில் ஸ்வப்னா சுரேஷின் வாக்குமூலம் இணைக்கப்பட்டுள்ளது.

பிரமாண பத்திரத்தில் கூறியிருப்பதாவது: தங்க கடத்தல், டாலர் கடத்தல் வழக்குகள் தொடர்பாக முதல் எதிரி ஸ்வப்னா சுரேஷிடம் விசாரணை நடத்தினோம். திருவனந்தபுரத்தில் பணியாற்றிய ஐக்கிய அரபு அமீரக தூதரக தூதருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் இடையே பாலமாக ஸ்வப்னா சுரேஷ் செயல்பட்டுள்ளார்.

தங்க கடத்தல், டாலர் கடத்தல் விவகாரங்களில் முதல்வர் பினராயி விஜயன், 3 அமைச்சர்களுக்கு நேரடி தொடர்பு உள்ளது. முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்று ஸ்வப்னா வாக்குமூலம் அளித்துள்ளார்.

கேரள சட்டப்பேரவைத் தலைவர் ராமகிருஷ்ணனுக்கும் கடத்தல் விவகாரங்களில் தொடர்பு உள்ளது. முதல்வர்,சட்டப்பேரவைத் தலைவரின் உத்தரவின்பேரிலேயே அமெரிக்க டாலர் கடத்தப்பட்டது. முக்கிய பிரபலங்கள் பலருக்கும் கடத்தலில் தொடர்பு உள்ளது என்றும் ஸ்வப்னா கூறியுள்ளார்.

கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கும் கடத்தல் விவகாரங்களில் தொடர்பு இருக்கிறது. கேரள அரசியல் தலைவர்கள், ஐக்கிய அரபு அமீரக தூதரக அதிகாரிகளுக்கு இடையே இணைப்பு பாலமாக அவர் செயல்பட்டுள்ளார்.

கேரளாவின் முக்கிய பிரபலங்களின் ஊழல் விவகாரங்களை ஸ்வப்னா சுரேஷ்அம்பலப்படுத்தியுள்ளார். இதன்காரணமாக சிறையில் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பது உண்மைதான்.

இவ்வாறு பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தங்கம், டாலர் கடத்தலில் மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு நேரடி தொடர்பிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது ஆளும் இடது ஜனநாயக முன்னணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

கடத்தலில் நேரடி தொடர்புடைய முதல்வர் பினராயி விஜயன் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x