Published : 06 Mar 2021 03:14 AM
Last Updated : 06 Mar 2021 03:14 AM

ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வணிகவரி துறை அதிகாரி கைது :

திருவள்ளூரைச் சேர்ந்த தொழில்அதிபர் ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறையில் அண்மையில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் எனது நிறுவனம் ஜிஎஸ்டி வரிதாக்கல் செய்யாமல் இருந்தது. ஜிஎஸ்டி வரியை தாக்கல் செய்வது தொடர்பாக சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள மாநில வரித்துறை அலுவலகத்துக்குச் சென்றேன்.

அப்போது அங்குள்ள வணிகவரி அலுவலர் எஸ்.செல்வக்குமார், ஜிஎஸ்டி தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு நடவடிக்கை தவிர்க்க ரூ.75 லட்சம் லஞ்சம் தரும்படி கேட்டார்.

இதற்கு ஒரு ஆடிட்டர் தரகராக செயல்பட்டார். இறுதியில் ரூ.20 லட்சம் லஞ்சம் தரும்படியும், அதில் ரூ.5 லட்சம் முதல் கட்டமாக தர வேண்டும் எனவும் செல்வக்குமார் தெரிவித்தார். லஞ்சம் கேட்கும் செல்வக்குமார், அவருக்கு ஆதரவாக தரகராக செயல்படும் ஆடிட்டர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை செய்தனர். விசாரணையில் செல்வக்குமார் லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர், அந்த தொழிலதிபரிடம் ரசாயனம் தடவிய ரூ.5 லட்சத்தை கொடுத்து, அதை செல்வக்குமாரிடம் லஞ்சமாக வழங்கும்படி கூறி அனுப்பினர். இதன்படி, வடபழனி 100 அடி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே அந்த தொழிலதிபர், வணிகவரி அலுவலர் செல்வக்குமாரிடம் ரூ.5 லட்சத்தை நேற்று கொடுத்தார்.

அதை செல்வக்குமார் பெற்றதும், அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்புத்துறையினர், அவரை கையும் களவுமாக கைது செய்தனர். உதவி செய்த ஆடிட்டர் கோபாலகிருஷ்ணன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x