Published : 06 Mar 2021 03:15 AM
Last Updated : 06 Mar 2021 03:15 AM

தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்கு கட்சி பிரமுகர்கள் சென்னையில் முகாம்: கட்சிக்குள்ளும், ஒரே கூட்டணிக்குள்ளும் கடும் போட்டி

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளு க்கான சீட் பெறுவதற்கு அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளின் பிரமுகர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பா சமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதி களும் எந்த கட்சிக்கு ஒதுக்கப்படும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தங்களுக்கு போட்டியிட வாய்ப்பை பெற்றுவிட வேண்டும் என்று அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் காய்களை நகர்த்தி வருகிறார்கள். இதற்காக சென்னையிலேயே கடந்த சில நாட்களாக அவர்கள் முகாமிட்டுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் திருநெல் வேலி தொகுதி எந்த கட்சிக்கு என்ற இழுபறி நீடிக்கும் நிலையில், பாஜக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தை அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் நயினார்நாகேந்திரன் தொடங்கிவிட்டார். அவருக்கு ஆதரவாக கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன், நட்சத்திர பேச்சாளர் குஷ்பு உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.

அதேநேரத்தில் இத் தொகுதியை அதிமுகவுக்கு பெறவும், கட்சி சார்பில் போட்டியிடவும் திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலாளர் என். கணேசராஜா, அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், முன்னாள் மேயர் புவனேஸ்வரி, மானூர் ஒன்றிய முன்னாள் தலைவர் கல்லூர் வேலாயுதம் ஆகியோர் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

திமுக தரப்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எல். எஸ். லட்சுமணன், முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா, முன்னாள் கவுன்சிலர் எஸ்.வி.சுரேஷ் ஆகியோர், திருநெல்வேலி தொகுதியில் சீட் பெறுவதற்கு போட்டிபோடுகிறார்கள்.

பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை தொகுதியில் அதிமுக தரப்பில் விஜிலாசத்தியானந்த், ஜெரால்ட் உள்ளிட்டோரும், திமுக தரப்பில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப், தற்போதைய எம்.எல்.ஏ. டிபிஎம் மைதீன்கான், முன்னாள் கவுன்சிலர் கமாலுதீன் உள்ளிட்டோரும் முட்டிமோது கிறார்கள்.

அம்பாசமுத்திரம்

அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் இசக்கிசுப்பையா, கணேசராஜா, தற்போதைய எம்.எல்.ஏ. முருகையாபாண்டியன், அவரது மகன் வெங்கட்ராமன், மாநிலங்களவை முன்னாள் உறுப் பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆகியோரிடையே போட்டி நிலவு கிறது. திமுக தரப்பில் சட்டப் பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன், அவரது மகன் ஏ.பிரபாகரன், அஜய் படையப்பன் சேதுபதி உள்ளிட்டோர் சீட் பெற முயற்சிக்கிறார்கள். அதேநேரத்தில் காங்கிரஸ் தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ வேல்துரை, அவரது மகன் வி.துரை ஆகியோர் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

ராதாபுரம்

ராதாபுரம் தொகுதியில் அதிமுக தரப்பில் தற்போதைய எம்.எல்.ஏ. இன்பதுரை, முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல்ராயப்பன், நிர்வாகிகள் பால்துரை, நாராயணபெருமாள், ஏ.கே.சீனிவாசனுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. திமுக தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, கட்சி நிர்வாகிகள் விஎஸ்ஆர் ஜெகதீஸ், எம்.கிரகாம்பெல், திருநெல்வேலி எம்.பி. ஞானதிரவியத்தின் மகன் சேவியர் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது.

நாங்குநேரி

நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தற் போதைய எம்.எல்.ஏ. நாராயணன், கட்சி நிர்வாகிகள் கணேசராஜா, மனோஜ்பாண்டியன், ஏ.கே. சீனிவாசன் ஆகியோர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். காங்கிரஸ் தரப்பில் இத் தொகுதியில் போட்டி யிட ரூபி மனோகரன் கடந்த 18 மாதங்களுக்கு முன்னரே தேர்தல் பணிகளை தொடங்கியிருக்கிறார். வழக்கறிஞர் காமராஜ் உள்ளி ட்டோரும் இத்தொகுதிக்கு குறி வைத்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி, அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளில் விருப்பமனு கொடுத்துள்ள பிரமுகர்கள் ஏராளமானோர் சென்னையிலேயே முகாமிட்டு, சீட் பெற்றுவிடும் முனைப்பில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x