Last Updated : 05 Mar, 2021 03:15 AM

 

Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

விளையாட்டாய் சில கதைகள்: மன்பிரீத் கவுரின் போராட்டம்

குண்டு எறியும் போட்டியில் தேசிய சாதனை படைத்த மன்பிரீத் கவுரின் பிறந்தநாள் இன்று (மார்ச் 5).

பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் 1990-ம் ஆண்டில் மன்பிரீத் கவுர் பிறந்தார். இவரின் அப்பா விவசாயி. 3 குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் இவர்தான் மூத்தவர். மன்பிரீத்தின் உறவினர்கள் இருவர் தடகள வீரர்களாக இருந்ததால், இவருக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டது. இதை தந்தையிடம் கூற, அவரும் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட அனுமதி அளித்துள்ளார்.

முதலில் ஓட்டப்பந்தய வீராங்கனையாக வரவே மன்பிரீத் கவுர் விரும்பியுள்ளார், ஆனால் சற்று குண்டான அவரது உடல்வாகு ஓட்டப்பந்தயத்துக்கு சரிப்பட்டு வராது என்பதால், குண்டு எறியும் போட்டியில் கவனத்தைச் செலுத்துமாறு அவரது பயிற்சியாளர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மன்பிரீத்தும் குண்டு எறியும் போட்டியில் பயிற்சிபெறத் தொடங்கினார்.

மன்பிரீத்துக்கு 13 வயதாக இருந்தபோது, அவரது அப்பா காலமானார். இதைத்தொடர்ந்து அவரது தாயாரும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இப்படி அடுத்தடுத்து சோதனைகள் வந்தபோதிலும் மன்பிரீத் கவுர் பயிற்சியை விடவில்லை. விளையாட்டு வீராங்கனையாகி இந்தியாவுக்காக பதக்கங்களைக் குவிக்கவேண்டும் என்ற லட்சியத்துடன் போராடினார்.

2007-ம் ஆண்டு நடந்த சர்வதேச இளையோர் தடகளப் போட்டியில் அவரால் 9-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. ஆனாலும் மனம் தளராமல் போராடிய மன்பிரீத் கவுர், இந்தியாவின் முன்னணி குண்டு எறியும் வீராங்கனையாக உருவெடுத்தார்.

2015-ல் நடந்த தேசிய ஓபன் தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்றர். இதைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017-ம் அண்டில் நடந்த ஆசிய தடகள போட்டியில் 18.86 மீட்டர் தூரத்துக்கு குண்டு எறிந்து புதிய தேசிய சாதனையை படைத்துள்ளார்.

கரம்ஜீத் சிங் என்பவரிடம் பயிற்சி பெற்றுவந்த மன்பிரீத் கவுர், பின்னர் அவரையே திருமணம் செய்துகொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x