Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் கடைபிடியுங்கள் - கரோனா இல்லை என்ற எண்ணம் வேண்டாம் : சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை

தமிழகத்தில் கரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்கவேண்டாம், சமூக இடைவெளியைக் கடைபிடித்து முகக் கவசம்அணிந்து செல்லுங்கள் என தமிழகசுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதார இயக்ககம் வளாகத்தில் தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர், கிங் மருத்துவமனையில் தொடங்கி, வேப்பேரி, சோழவரம், ஆவடி உள்ளிட்ட பல பகுதிகளிலும், அதன் பிறகு 108 மற்றும் 102 கட்டுப்பாட்டு அறையிலும் நேற்று ஆய்வுமேற்கொண்டனர். மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தடுப்பூசி மையத்திலும் ஆய்வு செய்தனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 25.07 லட்சம் கோவிஷீல்டு, 2.77 லட்சம் கோவேக்சின் என 27 லட்சத்து84 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.

தற்போது தமிழகத்தில் 500-க்கும் குறைவாகவே கரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் கூட, ஒரேகுடும்பத்தில் பலருக்கு கரோனாதொற்று ஏற்படுகிறது. சென்னையில் கடந்த 15 நாட்களில் மட்டும் 209 குடும்பங்களில் 450 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் கோவையில் காந்திபுரம், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் குடும்பங்கள் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலானோர் முகக் கவசம் அணிவதில்லை.

குடும்ப நிகழ்ச்சிகளில் அதிக அளவு பங்கு பெறுவோர், முகக் கவசம் அணியாதவர்களுக்குத் தான் பாதிப்பு அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. முடிந்தவரை சமூக இடைவெளி விட்டு முகக் கவசம் அணிய வேண்டும். தற்போது கரோனா இல்லைஎன்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x