Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

அதிமுக சார்பில் போட்டியிட எம்ஜிஆர் பேரன் விருப்பம் :

அதிமுக சார்பில் 3 தொகுதிகளில் போட்டியிட எம்ஜிஆரின் பேரன்விருப்பம் தெரிவித்தநிலையில், நேற்று நடந்த நேர்காணலில் கலந்து கொண்டார்.

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட 8, 241விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. விருப்ப மனு அளித்தவர்களிடம் மாவட்ட வாரியாக நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மனு தாரர்களை நேர்காணல் செய்தனர்.

அதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின், மனைவி ஜானகி அம்மாளின் அண்ணன் பேரனான ராமசந்திரன் நேர்காணலுக்காக தலைமை அலுவலகம் வந்திருந்தார். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ராமசந்திரன் கூறியதாவது: அதிமுகவில் கடந்த 2005-ம் ஆண்டு இணைந்தேன்.

வரும் சட்டப்பேரவை தேர்தலில்அதிமுக சார்பில் போட்டியிட ஆண்டிப்பட்டி, ஆலந்தூர், பல்லாவரம் ஆகிய 3 தொகுதிகளில் விருப்பமனு அளித்திருந்தேன். அதன் அடிப்படையில் நேர்காணல் நடத்தப்பட்டது. கரோனா காலகட்டத்தில் ஆண்டிப்பட்டி தொகுதியில் 60 ஆயிரம் பேருக்குஉணவு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளேன். பரங்கிமலை தொகுதியில்தான் முதன்முதலில் எம்ஜிஆர் வேட்பாளராக நின்றார். அது தற்போது ஆலந்தூர் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது. அதனால்தான் அந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தேன். எம்ஜிஆரின் பேரன் என்பதால் எங்கள் கட்சியில் இணைந்து விடுங்கள் என்று பல கட்சியினரும் எனக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால், நான் எப்போதும் அதிமுகவில்தான் இருப்பேன். 3-ல் ஏதேனும் ஒரு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். எனக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும். ஒருவேளை கிடைக்காமல் போனாலும் அதிமுகவை விட்டு எங்கும் போக மாட்டேன். தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x