Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

சசிகலா அரசியலில் இருந்து விலகியதற்கு பாஜக காரணம் அல்ல : தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி கருத்து :

சசிகலா அரசியலில் இருந்துவிலகியதற்கு பாஜக காரணம் அல்ல என்று அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள பாஜக எவ்வாறு தயாராகி வருகிறது?

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தும் பணிகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் எங்களுடைய கூட்டணி சிறப்பாக வெற்றி பெறுவதை நோக்கமாக வைத்து பணியாற்றி வருகிறோம்.

சசிகலா அரசியலில் இருந்து விலகியதற்கு பாஜக தான் காரணம் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்களே?

சசிகலாவின் முடிவை பாஜக வரவேற்கிறது. ஜெயலலிதா கனவு ஒருங்கிணைந்த அதிமுக தான். அந்த கனவை நிறைவேற்ற சசிகலா விரும்புகிறார். சசிகலா முடிவுக்கு பின்னால் பாஜக அழுத்தம் உள்ளது என்பது வதந்தி. சசிகலா அரசியலில் இருந்து விலகியதற்கு பாஜக காரணம் அல்ல. எங்களுடைய கட்சி அதிமுகவை இரண்டாக பிரிக்க விரும்பவில்லை. எங்களுடைய முக்கிய நோக்கமே திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பது தான்.

மீண்டும் அதிமுக ஆட்சியை அமைப்போம் என்று கூறுவதற்கான காரணம் என்ன?

திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களுடைய குடும்ப வளர்ச்சி மற்றும் வளத்தை பற்றி தான் சிந்திப்பார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி தொடர்ந்து செல்லும்.

மீண்டும் அதிமுக ஆட்சியை அமைப்பதற்கு விரும்பவில்லை என்று டி.டி.வி தினகரன் கூறிவருகிறாரே?

தனிப்பட்ட நபர்களின் விருப்பம் முக்கியமல்ல. தமிழகம் சிறப்பான வளர்ச்சியை பெற வேண்டும் என்பது மட்டும் தான் முக்கியம்.

டி.டி.வி தினகரன் தனியாக கட்சி நடத்துவது அதிமுகவின் வாக்குகளை பிரிக்காதா?

இன்னும் காலம் இருக்கிறது. காலம் முடிவு செய்யும். டி.டி.வி தினகரனும் ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.

சசிகலாவை தொடர்ந்து டி.டி.வி தினகரனும் அரசியலை விட்டு விலக வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

சரியான கேள்வியை தவறான முகவரியில் கேட்கிறீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x