Published : 04 Mar 2021 05:51 AM
Last Updated : 04 Mar 2021 05:51 AM

கரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் - இந்தியாவில் புதிதாக 40 பில்லியனர்கள் உருவாக்கம் : அம்பானி, அதானி சொத்து மதிப்பு உயர்வு

கரோனா பாதிப்பு காரணமாகப் பொருளாதார நடவடிக்கைகள் நெருக்கடிக்குள்ளான நிலையிலும் 2020ம் ஆண்டில் இந்தியாவில் புதிதாக 40 பில்லியனர்கள் உருவாகியிருக்கிறார்கள் என ஹுருன் குளோபல் பணக்காரர்கள் பட்டியலின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹுருன் குளோபல் பணக்காரர்கள் பட்டியலில் 1058 பில்லியனர்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. அதற்க அடுத்த இடத்தில் அமெரிக்கா 696 பில்லியனர்களுடன் உள்ளது. மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கின. இதனால் நாட்டின் வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டில் மைனஸ் 7 சதவீதமாகச் சரியும் நிலை ஏற்பட்டது. ஆனால் இத்தகைய சூழலிலும் சில தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு வெகுவாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக சொத்து மதிப்புள்ள பில்லியனர்களின் எண்ணிக்கை 2020ம் ஆண்டில் 177ஆக உயர்ந்திருக்கிறது. அதாவது இந்த ஆண்டில் 40 பேர் புதிதாக பில்லியனர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர்.

மேலும் அம்பானி, அதானி போன்ற முன்னணி தொழிலதிபர்களின் சொத்து மதிப்பும் வெகுவாக உயர்ந்துள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 24 சதவீதம் உயர்ந்து 83 பில்லியன் டாலராக உள்ளது. இவர் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஒரு இடம் முன்னேறி எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

அதேபோல் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்து 20 இடங்கள் முன்னேறி 48ம் இடத்தை எட்டியுள்ளார்.

ஹுருன் குளோபல் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் நிர்வாக இயக்குநர் அனாஸ் ரஹ்மான் ஜுனைத் இது குறித்து கூறுகையில், அமெரிக்கா, சீனா போன்றவற்றில் தொழில்நுட்ப நிறுவனங்களின் சொத்து மதிப்பு உயர்ந்திருக்கும் நிலையில் இந்தியாவில் பாரம்பரியமான துறைகள் மூலம் சொத்து மதிப்பு உயர்ந்திருக்கிறது என்று கூறினார்.

இந்தியாவில் பில்லியனர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, ஷிவ்நாடார், லட்சுமி மிட்டல், சைரஸ் பூனவல்லா, ஹிந்துஜா பிரதர்ஸ், உதய் கோடக், ராதாகிஷன் தமானி, ஜே சவுத்ரி மற்றும் திலிப் சங்வி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஈலான் மஸ்க் 197 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். 2020ல் இவருடைய சொத்து மதிப்பு 328 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜெஃப் பிசோஸ் இரண்டாம் இடத்திலும், பில்கேட்ஸ் நான்காம் இடத்திலும், மார்க் ஜூகர்பெர்க் 5ம் இடத்திலும், வாரன் பஃபெட் 6ம் இடத்திலும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x