Published : 04 Mar 2021 05:51 am

Updated : 04 Mar 2021 05:51 am

 

Published : 04 Mar 2021 05:51 AM
Last Updated : 04 Mar 2021 05:51 AM

மக்கள் நீதி மய்யத்துடன் சமக கூட்டணிமூன்றாவது அணியின் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் : தூத்துக்குடியில் சரத்குமார் அறிவிப்பு

தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் பேசினார். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

சமகவுடன் கொள்கை ரீதியாக மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கிறது. தமிழகத்தில் 3-வது அணியில் கமல்ஹாசன் தான் முதல்வர் வேட்பாளர்" என, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேற்று தெரிவித்தார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6-வது பொதுக்குழுக் கூட்டம் தூத்துக்குடி திரவியபுரத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான ரா.சரத்குமார் பேசியதாவது:


அதிமுக கூட்டணியில் 10 ஆண்டுகளாக அங்கம் வகித்தோம். இம்முறை எங்களுக்கு உரிய அங்கீகாரம் வேண்டும். ஒன்றிரண்டு இடங்களை கொடுத்தால் ஏற்கமாட்டோம். தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என தெரிவித்தோம். அதற்கு பிறகும் நமக்கு முறையான அழைப்பு வரவில்லை என்றால், அவர்கள் நம்மை மதிக்கவில்லை என்று அர்த்தம். நம்மை கறிவேப்பிலை போல பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த நிலை மாற வேண்டும்.

மேலும், நமது வாக்குச்சதவீதம் என்ன, நமக்கான இடம் தமிழகத்தில் எங்கே இருக்கிறது, தமிழக மக்கள் நம்மை எப்படி வரவேற்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.

ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்துவுடன் சேர்ந்து புதிய அணியை உருவாக்க முடிவு செய்தோம். இரு திராவிட கட்சிகளை தவிர்த்து நல்ல கூட்டணி தேவை என்ற மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த கூட்டணியை உருவாக்கியுள்ளோம்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசினேன். நேற்று (2-ம் தேதி) இரவு 11.55 மணியளவில் கமல்ஹாசன் என்னை தொடர்பு கொண்டு, கொள்கை ரீதியாக நாம் இணைகிறோம் என்ற மகிழ்ச்சிகரமான தகவலைத் தெரிவித்தார்.

சிறந்த கூட்டணி

எங்கள் அணியில் முதல்வர் வேட்பாளர் யார் என எல்லோரும் கேட்கிறார்கள். எங்கள் அணியின் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன். யார் யார் எந்த பதவியில் இருப்பார்கள் என்பது உள்ளிட்ட விவரங்களை கமல் பின்னர் கூறுவார். யார் முதல்வர் என்பது முக்கியமல்ல. வெற்றி பெற வேண்டும் என்பது தான் முக்கியம். அது தான் தேர்தலுக்கான வியூகம். இந்த கூட்டணியை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அடுத்த 2- 3 நாட்களில் இந்த பேச்சுவார்த்தை மேலும் வலுவடைந்து ஒரு சிறந்த கூட்டணி உருவாகும்.

இந்த கூட்டணி மூன்றாவது அணி அல்ல. முதன்மையான கூட்டணி. மக்களுக்கான கூட்டணி. வெற்றிக்கான வியூகத்தை அமைத்து இன்றே பணியைத் தொடங்குங்கள். வாக்குக்கு பணம் வாங்காதீர்கள் என வீடு வீடாகச் சென்று மக்கள் காலில் விழுந்து கேட்க தயாராக இருக்கிறேன். அதுபோல நீங்களும் கூறுங்கள். தொண்டர்கள் கடினமாக உழைக்க வேண்டும். அவ்வாறு உழைத்தால் நமது முதன்மை கூட்டணியை ஆட்சி பீடத்தில் அமர வைக்க முடியும் என்றார் சரத்குமார்.

தேர்தல் அறிக்கை வெளியீடு

'பணமில்லா அரசியல், உண்மையான ஜனநாயகம், எளியவருக்கும் வாய்ப்பு' என்ற தலைப்பில் கட்சியின் தேர்தல் அறிக்கையை சரத்குமார் வெளியிட்டார்.

பண அரசியலை ஒழிப்போம், கல்வி, மருத்துவம், அத்தியாவசிய பொருட்கள் தவிர வேறு எந்த இலவசங்களும் கிடையாது. தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டண விவகாரங்களை அரசே கையாளும். வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்குவோம். முழுநேரமும் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படும். தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 90 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும். ரேஷன் பொருட்கள் வீட்டுக்கே நேரடியாக விநியோகம் செய்யப்படும் என்பன உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகள் அதில் இடம் பெற்றுள்ளன.

கூட்டத்தில், மாநில துணைப் பொதுச் செயலாளர் என்.சுந்தர் முன்னிலை வகித்தார். தலைமை நிலையச் செயலாளர் எம்.பாகீரதிவரவேற்றார். முதன்மை துணைப் பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார், தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எக்ஸ்.வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தென்காசியில் சரத்குமார்,

கோவில்பட்டியில் ராதிகா...

ஆலங்குளம் அல்லது தென்காசியில் சரத்குமார், கோவில்பட்டியில் ராதிகா சரத்குமார் போட்டியிடப் இருப்பதாக சரத்குமார் அறிவித்தார். கட்சியின் நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக ரா.சரத்குமார், முதன்மை பொதுச்செயலாளராக ராதிகா சரத்குமார், பொருளாளராக ஏ.என்.சுந்தரேசன் மற்றும் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு கூட்ட மேடையில் பொறுப்பேற்றனர்.

2021 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகம் குறித்து முடிவெடுக்க சரத்குமாருக்கு அதிகாரம் வழங்குதல், தூத்துக்குடி விமான நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x