Published : 03 Mar 2021 03:20 AM
Last Updated : 03 Mar 2021 03:20 AM

ஒரு கைதியின் மென்பொருள் இந்திய சிறைகள் அதிநவீனமாகிறது

சிறைக் கைதி உருவாக்கிய மென்பொருளால் ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேச சிறைகள் அதிநவீனமாக மாறியுள்ளன. இந்த மென்பொருளை அனைத்து மாநில சிறைகளிலும் பயன்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹரியாணாவின் குர்காவ்ன் நகரை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அமித் குமார் மிஸ்ரா (36). கடந்த 2013-ம் ஆண்டில் இவரது மனைவி தற்கொலை செய்து கொண்டார். பெண் வீட்டார் அவர் மீது வரதட்சிணை புகார் அளித்ததால் அமித் குமார் கைது செய்யப்பட்டு, போன்ட்ஸி சிறையில் அடைக்கப்பட்டார். 13 மாதங்களுக்கு பிறகு அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

சிறையில் இருந்தபோது அமித் குமார், சிறை நிர்வாகத்துக்காக பீனிக்ஸ் என்ற மென்பொருளை உருவாக்கினார். இந்த மென்பொருளின் மாயாஜாலத்தால், போன்ட்ஸி சிறை அதிநவீனமாக மாறியுள்ளது.

சிறைக் கைதிகள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல், ஹேமந்த் குப்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமித் குமாரின் மென்பொருள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த மென்பொருளை அனைத்து மாநிலங்களின் சிறைகளில் பயன்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மென்பொருள் குறித்து முன்னாள் கைதி அமித் குமார் கூறியதாவது:

நான் சிறையில் இருந்தபோது சிறை கைதிகளின் விவரங்களை பராமரிப்பது சிறை காவலர்களுக்கு பெரும் சிரமமாக இருப்பதை அறிந்தேன். இந்த குறையை போக்க பீனிக்ஸ் என்ற மென்பொருளை உருவாக்கி அனைத்து சிறை கைதிகளின் விவரங்களையும் கணினியில் பதிவு செய்தேன். இப்போது ஒரு பொத்தானை அழுத்தினால் கைதியின் முழு விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

கைதிகள் தங்கள் உறவினர்களிடம் பேசும் வசதி, சிறை கேன்டீன் நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கினேன். மேலும் வழக்கு விசாரணை தேதிகள், கைதி விடுதலையாகும் நாள் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிகழ்வுகள் குறித்தும் சிறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே டிஜிட்டல் முறையில் தகவல் அனுப்ப ஏற்பாடு செய்தேன்.

இப்போது ஹரியாணாவின் 19 சிறைகளில் பீனிக்ஸ் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல ராஜஸ்தானில் 38, உத்தர பிரதேசத்தில் 31, இமாச்சல பிரதேசத்தில் 13 சிறைகளில் எனது மென்பொருள் பயன்பாட்டில் உள்ளது.

சிறையில் இருந்து வெளிவந்த பிறகு பல்வேறு இன்னல்களை சந்தித்தேன். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு 'இன்வேடர் டெக்னாலஜிஸ்' என்ற பெயரில் மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். எங்கள் நிறுவன வேலைவாய்ப்பில் சிறைக் கைதிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைபடி அனைத்து மாநிலங்களின் சிறைகளில் பீனிக்ஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டால் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக இந்திய சிறைகளும் அதிநவீனமாகும் என்று சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x