Published : 03 Mar 2021 03:22 AM
Last Updated : 03 Mar 2021 03:22 AM

இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கவே வன்னியர் உள் இடஒதுக்கீடு திருமாவளவன் குற்றச்சாட்டு

இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கவே வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு சட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றியிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உழைக்கும் மக்களை மதம், சாதி அடிப்படையில் பிளவுபடுத்தி, ஒற்றுமையை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுவதே இந்தியஅளவில் பாஜகவின் செயல்திட்டமாகும். தற்போது தமிழகத்தில் அதிமுகவுடன் இணைந்து சதித் திட்டம் தீட்டி தேர்தல் அரசியலில் பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. பாஜகவின் பிடியில் உள்ள அதிமுக அரசு, உள்ஒதுக்கீடு என்னும் பெயரால் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள (எம்பிசி)விளிம்புநிலை சமூகங்களை கூறுபோட்டு சட்டம் இயற்றியிருப்பது அதன் வெளிப்பாடுதான்.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக, வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு சட்ட மசோதாவை அதிமுக அரசு நிறைவேற்றியது. இந்த சட்டத்துக்கு ஒரே நாளில் ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். தேர்தல் ஆதாயத்துக்காக அதிமுக, பாமக, பாஜக கூட்டு சேர்ந்து இந்த சட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றன என்பதற்கு இதுவே ஆதாரம்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாத சூழலில், அத்தகைய எந்தத் தரவும் இல்லாதநிலையில் உள் ஒதுக்கீடு வழங்கினால் அது சட்டப்படி செல்லாததாகிவிடும். இந்த உண்மை பாஜக, பாமக, அதிமுகவினருக்கு தெரியும். ஆனால், இந்த ஒதுக்கீட்டைக் காட்டி வன்னியர்களின் வாக்குகளை வாரிக் கொள்ளலாம் என கனவு காண்கிறார்கள்.

20 சதவீதம் கேட்டவர்கள் எதன்அடிப்படையில் 10.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு ஒப்புக் கொண்டனர். பாதியை இழக்க எப்படி உடன்பட்டனர். 20 சதவீத இடஒதுக்கீட்டில், ஏறத்தாழ 15 சதவீதம் அளவில் பயன்பெற்றுவந்த வன்னியர்கள், இனி 10.5 சதவீதத்துக்குமேல் பயன்பெறவே முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

வன்னியர் சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீடு வழங்குகிறோம் என்ற பெயரில், அத்தகைய கோரிக்கையையே எழுப்பாத பிற சமூகத்தினரையும் பிரித்துகூறு போட்டிருக்கிறது அதிமுக அரசு. ஒட்டுமொத்தத்தில் இதரபிற்படுத்தப்பட்டோரின் ஒற்றுமையைச் சீர்குலைத்து அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மெல்ல மெல்ல ஒழித்துக்கட்டும் பாஜகவின் சதி திட்டத்தைத்தான் அதிமுக அரசும், பாமகவும் இப்போது நிறைவேற்றி உள்ளன. இதை உணர்ந்துள்ள வன்னியர் சமூகத்தினரும், இதர பிற்படுத்தப்பட்ட மக்களும் அதிமுக, பாமக, பாஜக கூட்டணியை படுதோல்வி அடையச் செய்வார்கள்.

இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x