Published : 03 Mar 2021 03:22 AM
Last Updated : 03 Mar 2021 03:22 AM

ஸ்டாலின், துரைமுருகன் முன்னிலையில் விருப்ப மனு அளித்தவர்களிடம் திமுகவில் நேர்காணல் தொடக்கம்

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து சுமார் 8 ஆயிரம் விருப்ப மனுக்கள் வந்துள்ளன.

விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நேற்று காலை 8 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோர் நேர்காணல் நடத்தினர். முதலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 6 தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், மாலை 4 மணி முதல் விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பேரவைத் தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. அப்போது அந்தந்த மாவட்டச் செயலாளர்களும் உடனிருந்தனர்.

தொகுதியில் வெற்றி வாய்ப்பு, பிரச்சார வியூகம், தேர்தல் செலவு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ஸ்டாலினும், துரைமுருகனும் கேட்டதாக நேர்காணலில் பங்கேற்ற ஒருவர் இந்து தமிழ் நாளிதழிடம் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ்ராஜன் (நாகர்கோவில்), கீதா ஜீவன் (தூத்துக்குடி), அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்), கே.ஆர்.பெரியகருப்பன் (திருப்பத்தூர்), தங்கம் தென்னரசு (திருச்சுழி), கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை), ஐ.பெரியசாமி (ஆத்தூர்), பேரவை முன்னாள் தலைவர் இரா.ஆவுடையப்பன் (அம்பாசமுத்திரம்), திமுக கொறடா அர.சக்கரபாணி (ஒட்டன்சத்திரம்), முன்னாள் எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச் செல்வன் (ஆண்டிபட்டி) என்று விருப்பமனு அளித்த முக்கிய நிர்வாகிகளிடம் ஸ்டாலினும், துரைமுருகனும் நேர்காணல் நடத்தினர்.

இன்று காலை 8 மணிக்கு மதுரை, நீலகிரி, ஈரோடு, மாலை 4 மணிக்கு திருப்பூர், கோவை, கிருஷ்ணகிரி மாவட்ட தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x