Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர் பணியை வரன்முறைப்படுத்த வழிகாட்டு முறை வெளியீடு

சென்னை

கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் பணியைவரன்முறைப்படுத்த புதிய வழிகாட்டு முறைகளை நிர்ணயித்து தொழிலாளர் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை செயலர் முகமது நஜிமுதீன் வெளியிட்டுள்ள அரசாணை:

கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களின் பணியை வரன்முறைப்படுத்துவதில் ஏற்பட்டு வந்த காலதாமதத்தை கருத்தில்கொண்டு, 2016 பிப்.1 வரை கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியர்களின் பணியை வரன்முறைப்படுத்த 2016 மார்ச் 2-ம் தேதி வழிமுறைகள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து, கடந்த 2020 ஜன. 23-ம் தேதி, ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், வருவாய்த் துறையில் கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர்களின் பணிவரன்முறை ஆண்டுக்கணக்கில் தேக்கமடைந்துள்ளதால் அந்த அலுவலர்களின்பணி நலன்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, நிலுவையில் உள்ளவற்றை ஒரே அரசாணையில் பணிவரன்முறை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனடிப்படையில் 2.2.2016 முதல் 31.12.2019 வரை வருவாய்த் துறையில் கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாகஅலுவலர்கள், தட்டச்சர்கள் ஆகியோருக்கு எந்தவித விதித்தளர்வு மற்றும் அரசாணைக்கு விலக்குதேவைப்படாத அனைத்து பணியாளர்களின் பணி நியமனங்களையும் ஒரே அரசாணையில் பணிவரன்முறை செய்ய வருவாய்த் துறையின் செயற்குறிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதை ஏற்றுஅனைத்து துறைகளிலும் இதைச்செய்தால் நியாயமாக இருக்கும்என்பதால் கருணை அடிப்படையிலான பணிநியமனங்களை வரன்முறை செய்ய வசதியாக பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுமாறு அரசு ஆணையிடுகிறது.

கடந்த 2.2.2016 முதல் 31.12.2019 வரை கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு எந்தவித விதித்தளர்வு மற்றும் அரசாணை விலக்குதேவைப்படாத அனைத்து பணியாளர்களின் பணி நியமனமும் நடைமுறையில் உள்ள விதிகளுக்குஉட்பட்டு பணிவரன்முறை செய்யப்படும். பணிவரன்முறைப்படுத்த விதித்தளர்வு மற்றும் அரசாணைகளுக்கு விலக்கு தேவைப்படும் பணியாளர்களை பொறுத்தவரை, அவர்களை தற்காலிக அரசு பணியாளர்களாக கருதி நடைமுறையில் உள்ள விதிகளுக்கு உட்பட்டு 2-ம் மற்றும் தொடர் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x