Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

முதல்வருக்கு சிறிது நேரம் கிடைத்திருந்தால்மளிகைக் கடை கடனை கூட ரத்து செய்திருப்பார்முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்

‘முதல்வர் பழனிசாமிக்கு இன்னும் சிறிது நேரம் கிடைத்திருந்தால் மளிகைக் கடன், நண்பர்களிடம் வாங்கிய கைமாற்றுக் கடனை கூட ரத்து செய்திருப்பார்’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, திருப்பாச்சேத்தி ஆகிய இடங்களில் நடந்த காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.

அப்போது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் நான்கே முக்கால் ஆண்டுகள் கும்பகர்ணன் மாதிரி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துவிட்டு, கடைசி 3 மாதங்களில் ஊர் ஊராகச் சுற்றி, சுற்றி வந்தார். மேலும் அடிக்கல் நாட்டுகிறேன், கடனை அடைக்கிறேன் என்று தினமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதெல்லாம் தேர்தலுக்கான வெற்று அறிவிப்பு தான்.

மகளிர் சுய உதவிக் குழுவினர் கடன் ரத்து அறிவிப்பில் எத்தனை மகளிர் சுய உதவிக் குழுக்கள், எத்தனை ஆயிரம் கோடி கடன், வட்டி எவ்வளவு என்று எதுவுமே இல்லை. கடனை ரத்து செய்வது குறித்து வங்கியிடம் கருத்துக் கேட்டார்களா என்று கூட தெரியவில்லை.

கடந்த 26-ம் தேதி மாலை 5 மணிக்கு தேர்தல் அறிவிப்பு வரவுள்ளது என்று தெரிந்தவுடனேயே முதல்வர் பழனிசாமி அவசர, அவசரமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இன்னும் சிறிது நேரம் கிடைத்திருந்தால் மளிகைக் கடன், நண்பர்களிடம் வாங்கிய கைமாற்றுக் கடனை கூட ரத்து செய்வதாக அறிவித்திருப்பார்.

தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறக் கூடாது. அப்படி வென்றால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. அதனால் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x