Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

திருச்சியில் மார்ச் 7-ம் தேதி திமுக பொதுக்கூட்டம்தொலைநோக்குப் பார்வை ஆவணத்தை வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்

திமுக பொதுக்கூட்டம் மார்ச் 7-ம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. இதில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வை ஆவணம் வெளியிடப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிர்வாகிகள், தொண்டர்களின் வாழ்த்துகளை நேற்று ஏற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிறந்தநாளை முன்னிட்டு எனக்கு நேரிலும், ஊடகங்கள் வாயிலாகவும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இன்னும் 2 மாதங்களில் தமிழகத்தில் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஆட்சி மாற்றம் ஏற்படவிருக்கிறது. அதற்கான பிரச்சாரத்தை கடந்த சில மாதங்களாக திமுக சார்பில் நானும், முன்னணித் தலைவர்களும் மேற்கொண்டு வருகிறோம்.

கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறோம். தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. வரும் 7-ம் தேதி திருச்சியில் மாநாடு போல, ஒரு சிறப்பான கூட்டத்தை நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகளை திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு செய்து வருகிறார்.

இந்தக் கூட்டத்தில் மிக முக்கியமான லட்சியப் பிரகடனத்தை, தமிழகத்துக்கான, தொலைநோக்குப் பார்வையை நான் வெளியிட இருக்கிறேன். மு.க.ஸ்டாலின் ஆகிய நான் தமிழகத்தின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான எனது தொலைநோக்குப் பார்வை ஆவணத்தை அங்கு வெளியிட இருக்கிறேன்.

அடுத்த 10 ஆண்டுக்குள்ளாக அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முதல் இடத்துக்கு வரும் சூழ்நிலையைப் பெறும் என்ற நம்பிக்கையோடு அந்தத் திட்டத்தை நாங்கள் வகுத்திருக்கிறோம். இதை செயல்படுத்திக் காட்ட வேண்டிய பொறுப்பு என்னுடையது. 10 ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு துறையிலும் அடைய வேண்டிய இலக்கையும் அதில் நான் வரையறுத்திருக்கிறேன்.

இதுவரை தமிழக மக்களுடன் நடத்திய சந்திப்புகள் பல்துறை அறிஞர்கள் பல கட்டங்களாக நடத்தியிருக்கும் கலந்துரையாடல்களை எல்லாம் தொகுத்து அந்த தொலைநோக்கு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பின்போது மக்களுக்கு எவ்வாறு துணை நின்றோமோ, அதேபோல் தொடர்ந்து எந்த நிலையில் இருந்தாலும் மக்களுக்கு திமுக பணியாற்றும் என்பதுதான் எனது பிறந்த நாள் செய்தி. தமிழகத்தின் கடனை குறைப்பதற்கான திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x