Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM

விருப்ப மனு பெறுதல் நிறைவு; நாளை முதல் நேர்காணல்திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் மீண்டும் போட்டி

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 8 ஆயிரம் பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். திமுக வேட்பாளர்களை தேர்வு செய்ய நாளை (மார்ச் 2) முதல் 6-ம் தேதி வரை நேர்காணல் நடைபெறவுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, தமாகா, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களைப் பெற்றுள்ளன. திமுக சார்பில் கடந்த 17-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. நேற்று மாலை 5 மணியோடு விருப்ப மனு பெறுதல் நிறைவு பெற்றது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அமைப்புச் செயலாளர், தலைமை நிலைய மேலாளர் ஆர்.பத்மநாபன், துணை மேலாளர் என்.ஜெயக்குமார் ஆகியோரிடம் நேற்று காலை விருப்ப மனு அளித்தார். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர். கடந்த 2011, 2016 பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஸ்டாலின், 3-வது முறையாக அங்கு போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

முதல் முறையாக தேர்தலில் போட்டியிட உள்ள திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். தனித் தொகுதிகள் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின், உதயநிதி போட்டியிட வலியுறுத்தி நூற்றுக்கணக்கான திமுக நிர்வாகிகள் விருப்ப மனு அளித்துள்ளனர்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் - காட்பாடி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு - திருச்சி மேற்கு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி - ஆத்தூர், க.பொன்முடி - திருக்கோவிலூர், முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு - திருவண்ணாமலை, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - குறிஞ்சிப்பாடி, தா.மோ.அன்பரசன் - ஆலந்தூர், வெ.செந்தில்பாலாஜி - அரவக்குறிச்சி, உ.மதிவாணன் - கீழ்வேளூர், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - அருப்புக்கோட்டை, தங்கம் தென்னரசு - திருச்சுழி, கீதா ஜீவன் - தூத்துக்குடி, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் - திருச்செந்தூர், மைதீன்கான் - பாளையங்கோட்டை, கே.ஆர்.பெரியகருப்பன் - திருப்பத்தூர் ஆகியோர் தங்கள் தொகுதிகளில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர்.

திமுக கொறடா அர.சக்கரபாணி - ஒட்டன்சத்திரம், திமுக இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி - திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் பழனிவேல் தியாகராஜன் - மதுரை மத்தியதொகுதி, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகன் டிஆர்பி ராஜா - மன்னார்குடி, திமுக மாவட்டச் செயலாளர்கள் மா.சுப்பிரமணியன் - சைதாப்பேட்டை, பி.கே.சேகர்பாபு - சென்னை துறைமுகம் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர். திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு - லால்குடி, கவிஞர், எழுத்தாளர் சல்மா - மணப்பாறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர்.

விருப்பமனு அளிப்பதற்கான கடைசி நாளான நேற்று மாலை 5 மணி வரை சுமார் 8 ஆயிரத்து 500 பேர் விருப்ப மனுக்கள் பெற்றதாகவும், அதில் சுமார் 8 ஆயிரம் மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். விருப்ப மனு அளித்தவர்களிடம் மார்ச் 2 (நாளை) முதல் 6-ம் தேதி வரை நேர்காணல் நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x