Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM

‘இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி' தொடங்கினார் அர்ஜூனமூர்த்தி ஆட்சிக்கு வந்தால்4 துணை முதல்வர்கள்

ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்திருந்த ரா.அர்ஜூனமூர்த்தி 'இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி' என்ற புதிய கட்சியை சென்னையில் நேற்று தொடங்கினார்.

தமிழக பாஜகவில் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்தவர் ரா.அர்ஜூனமூர்த்தி. இவர், நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக சேர்ந்தார். ரஜினி கட்சி தொடங்கவில்லை என அறிவித்த நிலையில், நேற்று சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும் என விரும்பினேன். அதற்காக புதிய கட்சியை தொடங்கி இருக்கிறேன். எங்கள் கட்சியின் பெயர் இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி. இதற்கான சின்னத்தை நீலம், சிவப்பு, வெள்ளை நிறத்தில் வெளியிட்டு இருக்கிறோம். அது சத்தியம், சமத்துவம், சமர்ப்பணம் என்ற கருப்பொருளில் உருவாக்கப்பட்டுள்ளது.

எங்கள் கட்சி ஆட்சி அமைத்தால், வறுமையில் இருக்கும் குழந்தைகள் படிக்க முடியாததால் தீய பழக்கங்களில் ஈடுபட்டு திசை மாறி செல்லக்கூடாது என்பதற்காக பணியாளர் மேம்பாட்டு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். அங்கு ஏழை மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். அங்கு தேர்வு எதுவும் நடத்தப்படாது.

அந்தந்த பகுதியில் உள்ள தொழில் செய்யும் இளைஞர்களை ஊக்குவித்து, மேம்பாடு அடைய செய்வதற்காக கிராம வளர்ச்சி அதிகாரி நியமிக்கப்படுவார்.

விவசாயிகள் பலர் படிப்பறிவு இல்லாதவர்கள். அதனால் அவர்களை காலத்துக்கேற்ற நவீன வேளாண் தொழில்நுட்பத்துக்குள் அழைத்து செல்லும் வகையில் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை வேளாண் கல்வியை அடிப்படை கல்வியாக கொண்டு வருவோம்.

கல்லூரி மாணவர்கள், கல்லூரி செல்ல ஏதுவாக பெட்ரோல் கார்டு வழங்கப்படும். இந்த கார்டில் வாங்கும் பெட்ரோலுக்கு மாநில வரி விலக்கு அளிக்கப்படும். இது கல்லூரி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

4 துணை முதல்வர்கள்: அதிகார பரவலாக்கலை ஏற்படுத்தும் விதமாக தமிழகத்தில் முதன்முறையாக 4 துணை முதல்வர் பதவிகள் உருவாக்கப்படும். ஒரு பெண் துணை முதல்வர், பிரதிநிதித்துவம் இல்லாத சமூகத்திலிருந்து ஒரு துணை முதல்வர், அம்பேத்கரின் கனவை நினைவாக்க பட்டியலினத்திலிருந்து ஒரு துணை முதல்வர், அறிவுசார் பார்வையில் ஒரு துணை முதல்வர் என நியமிக்கப்படுவார்கள்.

கட்சியின் புதிய நிர்வாகிகளை திங்கள்கிழமைக்குள் அறிவிக்க இருக்கிறோம். ஏற்கெனவே ஒரு தொகுதிக்கு 4 வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளோம். கூட்டணி தொடர்பாக, கட்சியின் நிர்வாக குழுவுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கும்.

ரஜினி ரசிகர்கள்: ரஜினி தனது ரசிகர்கள், யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்துக்கொள்ளலாம் என வெளிப்படையாக அறிவித்துள்ளார். செயல்திட்டத்திலும், அணுகுமுறையிலும் நான் வித்தியாசப்படுவேன். மாற்றத்துக்கான ஒரு நபராக இருப்பேன் என என்னை நம்பினார்கள் என்றால் அவர்களை நாங்கள் வரவேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

ரஜினி வாழ்த்து: இதனிடையே, புதிய கட்சி தொடங்கிய அர்ஜூனமூர்த்திக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x