Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் தி.மலையில் வெற்றியை ருசிக்காத அதிமுக 2021-ல் விடியல் பிறக்கும் என ரத்தத்தின் ரத்தங்கள் நம்பிக்கை

திருவண்ணாமலை சட்டப்பேரவை தொகுதி தேர்தல் வரலாற்றில் ஒரு முறை கூட அதிமுக வெற்றி பெறவில்லை என்பதால் 2021-ல் விடியல் பிறக்கும் என்ற நம்பிக் கையில் ரத்தத்தின் ரத்தங்கள் காத் திருக்கின்றனர்.

தமிழக தேர்தல் வரலாற்றில், திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதி 15 தேர்தல்களை சந்தித்துள்ளது. திமுக 9 முறையும், காங்கிரஸ் 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதில், கடைசியாக நடைபெற்ற ஐந்து தேர்தல்களில் (1996 முதல் 2016 வரை) வெற்றி வாகையை திமுக சூடியது. திமுக தொடங்கப்பட்ட நாள் முதல், திமுகவின் கோட்டை என அழைக்கும் அளவுக்கு தேர்தல் முடிவுகள் உள்ளன. ‘திமுகவுக்கு திருப்புமுனையை கொடுத்தது திருவண்ணாமலை’ என அண்ணா துரை மற்றும் கருணாநிதி போன்றவர்களால் பேசப்பட்ட வரலாறு உண்டு. அவர்களது உச்சரிப்பு, மு.க.ஸ்டாலின் மூல மாகவும் எதிரொலிக்கிறது.

திமுகவின் கோட்டை என அழைக்கப்பட்டு வரும் திருவண் ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுகவின் ‘இரட்டை இலை துளிர முடியாமல்’ உள்ளது. அதிமுக தொடங்கப்பட்ட பிறகு நடைபெற்றுள்ள 10 தேர்தலில் (1977 முதல் 2016 வரை), ஒரு முறை கூட அக்கட்சியானது வெற்றியை ருசிக்கவில்லை. இதில், அதிமுக 5 முறை போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளது. 4 முறை கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுத்துள்ளது. இதில், 2 முறை (1984 மற்றும் 1991) கூட்டணி கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவு பட்டதால், 1989-ல் நடைபெற்ற தேர்தலில் இரட்டை இலை சின்னம் போட்டியிட வில்லை.

இந்நிலையில், தமிழகத்தில் 16-வது சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் மாலை அறிவித்துள்ளது. இத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை துளிர்ந்து, திமுகவின் கோட்டை என்ற சொல்லை தகர்த்தெறிய வேண்டுமென அக்கட்சியினர் விரும்புகின்றனர்.

உட்கட்சி பூசலால் படுதோல்வி

இதுகுறித்து அதிமுகவினர் கூறும்போது, “அதிமுக தொடங்கி 48 ஆண்டுகள் கடந்தும், திருவண் ணாமலை தொகுதியில் இரட்டை இலை வெற்றி பெறவில்லை. வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் இருந்தபோதும், கூட்டணி தர்மம் கடைபிடிக்கப்பட்டது. ஆனால், அதிமுக போட்டியிட்ட போது, கூட்டணி தர்மம் கடைபிடிக்கப்பட வில்லை. அதன் விளைவு, கடந்த 3 தேர்தலில் (2006 முதல் 2016 வரை) அதிமுக தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. அந்த தேர்தலில் உட்கட்சி பூசலும், படுதோல்விக்கு வழி வகுத்தது.

தகுதியானவரை களம் இறக்கவும்

அண்ணாமலையார் பூமியான திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதே ஒவ்வொரு தொண்டனின் ஆசை யாகும். இந்த தேர்தலில், திரு வண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதியை வென்றெடுக்க, கட்சியை வழி நடத்தும் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகி யோர் தீவிரமாக செயல்பட வேண்டும். திமுகவை வீழ்த்த தகுதியானவரை தேர்வு செய்து களம் இறக்க வேண்டும்.

விட்டு கொடுக்காதீர்...

திருவண்ணாமலையை கேட்டு கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுத்தாலும், எக்காரணத்தை கொண்டும் தொகுதியை விட்டுக்கொடுக்கக்கூடாது. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் போட்டியிட வேண்டும். திருவண்ணாமலை தொகுதியின் வெற்றியை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு காணிக்கையாக்க வேண்டும். முதன்முறையாக இரட்டை இலை துளிர்வதை பார்க்கும் போது தொண்டர்களின் ஆசையும் நிறை வேறும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x