Published : 27 Feb 2021 03:16 am

Updated : 27 Feb 2021 03:16 am

 

Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்

சென்னை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு தமிழக ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:


ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தா.பாண்டியன் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவரது மறைவு தமிழக மக்களுக்கு, குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: தா.பாண்டியன் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

முதல்வர் பழனிசாமி: பள்ளிப் பருவத்திலேயே சமூகம், அரசியல் மற்றும் இலக்கியம் மீது ஆர்வம் கொண்டவர் தா.பாண்டியன். பேராசிரியர், வழக்கறிஞர், அரசியல்வாதி, இலக்கியவாதி, தொழிற்சங்கவாதி, பேச்சாளர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். அவரது மறைவு தமிழகத்துக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பேரிழப்பு.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் போர்க்குரலாக ஒலித்தவர். நினைத்த கருத்தை எவ்விததயக்கமும் இல்லாமல், எத்தகையதலைவர்களிடமும் எடுத்து வைக்கும் அற்புதமான ஆற்றல் படைத்தவர். அவர் மேடைகளிலோ - விவாதங்களிலோ பேசத் தொடங்கிவிட்டால் கேட்டுக்கொண்டே இருக்க லாம்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: மேடைப்பேச்சு மற்றும் எழுத்தின் மூலம் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தனி முத்திரைபதித்தவர். காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார்.

பாமக தலைவர் ராமதாஸ்: பொதுவுடைமைத் தலைவர் ஜீவாவின் அன்பைப் பெற்றவர் தா. பாண்டியன். இந்தியாவின் மூத்தஅரசியல் தலைவர்களுடன் இணைந்து அரசியல் பணியாற்றியவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன்: தனது 15-வது வயதிலேயே பொதுவுடமை இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டவர் தா.பாண்டியன். அவரது பேச்சு, எழுத்து, சொற்பொழிவு அனைத்தும் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும். இறுதிமூச்சு வரை உழைக்கும் மக்களுக்காக போராடினார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தோழர் தா.பா. தமிழகஅரசியல் மேடைகளில், தன்னிகரற்ற சொற்பொழிவாளர். ஆற்றொழுக்கு போல, தங்கு தடையின்றி தமது கருத்துகளை எடுத்துரைப்பவர்.

திக தலைவர் கி.வீரமணி: சமூகநீதி, மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் நாடு ஒரு போர்ப்படை தளபதியை இழந்துவிட்டது.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்: எழுத்தாற்றல், பேச்சாற்றல், சிந்தனை, செயல்கள் அனைத்தும் ஒருங்கே பெற்ற தா.பாண்டியன், பொதுவுடைமை இயக்கத்தின் தூணாக விளங்கியவர். இவ்வாறு அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சு.திருநாவுக்கரசர், எம்பி, கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, சமக தலைவர் சரத்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சிதலைவர் தி.வேல்முருகன், இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் ரவிபச்சமுத்து, பாரிவேந்தர், எம்பி, முன்னாள் எம்எல்ஏ எம்ஜிகே நிஜாமுதீன் உள்ளிட்டோரும் தா.பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x