Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் மேளா ஆட்சியர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரத்தில் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கும் அவர்களுக்கு உதவித் தொகை வழங்கவும் விவசாயிகள் மேளா நேற்று நடைபெற்றது.

காஞ்சி பஞ்சுப்பேட்டையில் உள்ள வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை ஆட்சியர் மகேஸ்வரி தொடங்கி வைத்து, பேசியதாவது:

தமிழக அரசு அறிவித்துள்ள வேளாண் திட்டங்களை காஞ்சி மாவட்டம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் பங்களிப்பு தொகை ஏதும் இல்லாமல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை சார்பில் ஆத்மா திட்டத்தில் நடப்பு ஆண்டு 2020-2021ல் மாவட்ட அளவில் 20 விவசாயிகளை தேர்வு செய்து பயிற்சிகள் அளிக்கப்ட்டன.

மாநில அளவில் சுமார் 120 விவசாயிகளை தேர்வு செய்து கடலூர், தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஆராய்ச்சி நிலையங்களில் வைத்து தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும் மாவட்ட அளவிலும் பல்வேறு பயிற்சிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

மாவட்டம்தோறும் அனைத்து வட்டாரங்களிலும் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு பண்ணை பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பள்ளியில் பயிரின் விதைப்பு முதல் அறுவடை வரை பயிரை தாக்கக் கூடிய தீமை செய்யும் பூச்சிகளை கண்டறிந்து, அதை கட்டுப்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு பண்ணைப் பள்ளிக்கு 25 விவசாயிகள் வீதம் 6 பண்ணைப் பள்ளிகளில் 150 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 வட்டாரங்களில் 100 நபர்கள் கொண்ட உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு உருவாக்கப்படும் ஒவ்வொரு உற்பத்தியாளர் குழுவுக்கும் 5 லட்சம் தொகுப்பு நிதி அளிக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு நிதி மூலம் பண்ணை கருவிகள் குழுவில் உள்ள 100 விவசாயிகளும் உபயோகித்துக் கொள்ளலாம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர்கள் கோல்டி பிரேமாவதி, தயாசங்கர் லால் வத்சவா, தோட்டக் கலை துணை இயக்குநர் ஜெயபாண்டி, வேளாண் பொறியியல் துறை நிர்வாகப் பொறியாளர் தங்கராஜ், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை துணை இயக்குநர் முகமது ரஃபிக் பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x