Published : 26 Feb 2021 03:14 AM
Last Updated : 26 Feb 2021 03:14 AM

முழு ஆண்டு, பொதுத் தேர்வுகள் இல்லை 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை

தமிழகத்தில் 9. 10. 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துஉள்ளார்.

தமிழகத்தில் கரோனா அச்சத்தால் இந்த கல்வி ஆண்டில் பள்ளிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொற்று பரவல் குறைந்துவரும் நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, பள்ளிகளை படிப்படியாக திறக்க தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி முதல்கட்டமாக 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன்பின், 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களும் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 3 முதல் 21-ம் தேதி வரை நடக்கும் என தேர்வுத் துறை அறிவித்தது.

இந்நிலையில், பொதுத் தேர்வுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி 110-வது விதியின்கீழ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க 2020-21-ம் கல்வியாண்டில் பள்ளிகள் மூடப்பட்டன. தொற்று கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து ஜனவரி 19-ம் தேதி முதல் 10 மற்றும் பிளஸ் 2 மாணர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப் பட்டன.

இந்த கல்வியாண்டு முழுவதும் மாண வர்கள் கல்வித் தொலைக்காட்சி மூலமாக வும், இணையதளம் மூலமாகவும் கல்வி பயின்று வருவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில்கொண்டு பாடங்களும் குறைக் கப்பட்டன. மேலும், மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டும், பெற்றோரின் கோரிக்கையை கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்து களை பரிசீலித்தும் 2020-21ம் கல்வி யாண்டில் 9. 10, பிளஸ் 1 ஆகிய வகுப்பு மாணவர்கள் அனைவரும் முழுஆண்டு மற்றும் பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப் பீட்டு நெறிமுறைகள் அரசால் விரிவாக வெளியிடப்படும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அரசு ஊழியர் ஓய்வு வயது

60 ஆக உயர்வு

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 59- ல் இருந்து 60 ஆக உயர்த்தி முதல்வர் பழனிசாமி அறிவித்துஉள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக அரசுப் பணியாளர்கள், பணியில் இருந்து ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் எனது உத்தரவின் பேரில், அரசாணை வெளியிடப்பட்டது. அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 59 என்பது 60 ஆக உயர்த்தப்படும். இந்த உத்தரவு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும். அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் இந்த ஆண்டு மே 31-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

தெலங்கானா, கோவா, அருணாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், லடாக் மிசோரம், மணிப்பூர், பஞ்சாப், ஹரியாணா, இமாச்சல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் 58 ஆகவும், ஜார்க்கண்ட், கேரளாவில் 56 ஆகவும் ஓய்வு வயது உள்ளது. ஆந்திரா, திரிபுரா, கர்நாடகா, அசாம், பிஹார், மேகாலயா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், நாகாலாந்து, குஜராத், உத்தராகண்ட், உத்தரபிரதேசத்தில் ஓய்வு வயது 60 ஆக உள்ளது. மேற்குவங்கத்தில் மருத்துவ பேராசிரியர்களுக்கு 65 ஆகவும், மருத்துவர்களுக்கு 62 ஆகவும், அரசு ஊழியர்களுக்கு 60 ஆகவும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x