Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

சட்டப்பேரவை கலைப்புக்கு ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு வெளியானது

புதுச்சேரி சட்டப்பேரவை கலைப்புக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ஆட்சி நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மோதல் வலுத்து, பல நலத்திட்டங்கள் முடங்கின.

இந்நிலையில் ஆளும் காங் கிரஸில் 5 எம்எல்ஏக்கள், கூட்டணிக் கட்சியானதிமுகவில் ஒரு எம்எல்ஏ அடுத்தடுத்து பதவி விலகியதால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தின.துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் உத்தரவுப்படி சட்டப்பேரவையில் கடந்த 22-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. முதல்வர் உரை முடிந்தவுடன் அவருடன் காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

இதையடுத்து, புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் ராஜினாமா கடிதத்தை நாராயணசாமி அளித்தார். அவரும் அதை ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். நாராயணசாமி ராஜினாமா செய்த பிறகு எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இதையடுத்து சட்டப்பேரவையை முடக்கி வைத்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார்.

நாராயணசாமியின் ராஜினா மாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு நேற்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பான உத்தரவை மத்தியஉள்துறை அமைச்சகம் நேற்று இரவு வெளி யிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x