Published : 24 Feb 2021 03:16 AM
Last Updated : 24 Feb 2021 03:16 AM

2021-22-ல் நிதிப் பற்றாக்குறை ரூ.84,202 கோடியாக இருக்கும் தமிழகத்தின் மொத்த கடன் ரூ.4.85 லட்சம் கோடி நடப்பாண்டில் ரூ.84,686 கோடி கடன் வாங்க முடிவு

தமிழகத்தின் மொத்த கடன் வரும் மார்ச் 31-ல் ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடியே 54 லட்சமாகவும், நிதிப் பற்றாக்குறை ரூ.84,202 கோடியே 39 லட்சமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ.84,686 கோடியே 75 லட்சம் கடன் வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனா பெருந்தொற்றால் தமிழக அரசின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2020-21 பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்ட வருவாய் 17.64 சதவீதம் குறைந்து, ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 530 கோடியே 30 லட்சமாக இருந்தது. 2020-21 திருத்த மதிப்பீடுகளில் தமிழகத்துக்கான மத்திய வரியின் பங்கு ரூ.32,849 கோடியில் இருந்து ரூ.23,039 கோடியே 46 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வருவாயில் மாநிலங்கள் தங்களுக்குரிய பங்கை பெறுவதற்கு, மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை அடிப்படை வரி வீதங்களுடன் மத்திய அரசு இணைக்க வேண்டும்.

கரோனாவால் சுகாதாரம், நிவாரணம் தொடர்பான பணிகளுக்காக ரூ.12,917.85 கோடி கூடுதல் செலவானது. ஆனால், தற்போதுள்ள நலத் திட்டங்களுக்கான செலவுகள் குறைக்கப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம் தடையில்லாமல் வழங்கப்பட்டது. செலவுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளால் ரூ.13,250 கோடி சேமிக்கப்பட்டது. இதனால், 2020-21 திருத்த மதிப்பீடுகளில் மொத்த வருவாய் செலவினம் ரூ.2 லட்சத்து 46 ஆயிரத்து 694 கோடியே 69 லட்சம் என்று மதிப்பிடப்பட்டது. வருவாயில் ஏற்பட்ட கடும் சரிவினாலும், அதிகரித்த செலவுகளாலும் 2020-21 திருத்த மதிப்பீடுகளில் ஒட்டுமொத்த வருவாய் பற்றாக்குறை ரூ.65,994 கோடியே 6 லட்சமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பட்ஜெட்டில் கணிக்கப்பட்ட ரூ.21,617 கோடியே 61 லட்சத்தைவிட மிக அதிகமாகும்.

கரோனாவால் வருவாய் குறைந்து, செலவுகள் அதிகரித்ததால், அரசு கடன் பெறுவதை தவிர்க்க முடியாது. இதனால் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும். 2020-21 திருத்த மதிப்பீடுகளில் நிதிப் பற்றாக்குறை, மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.99 சதவீதம் அதாவது ரூ.96,889 கோடியே 97 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021-22 இடைக்கால பட்ஜெட்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 641 கோடியே 78 லட்சமாகவும், வரியல்லாத வருவாய் ரூ.15,648 கோடியே 42 லட்சமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 15-வது நிதிக்குழு பரிந்துரை அடிப்படையில் தமிழகத்துக்கான நிதிப் பகிர்வு 2021-22-ல் சிறிய அளவு குறைந்து ரூ.27,148 கோடியே 31 லட்சமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த வருவாய் வரவு ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 991 கோடியே 96 லட்சமாகவும், வருவாய் செலவினம், ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்து 409 கோடியே 26 லட்சமாகவும், வருவாய் பற்றாக்குறை ரூ.41,417 கோடியே 30 லட்சமாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2020-21-ல் மூலதனச் செலவுகள் 14.41 சதவீதம் உயர்ந்து ரூ.43,170 கோடியே 61 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021-22-ல் மாநிலங்களுக்கான நிதிப் பற்றாக்குறை அளவை உயர்த்தி, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதம் வரை அனுமதிக்க வேண்டும் என்று 15-வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, 2021-22-ல் நிதிப் பற்றாக்குறை, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.94 சதவீதம் அதாவது ரூ.84,202 கோடியே 39 லட்சமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

2021 மார்ச் 31-ம் தேதியில் ஒட்டுமொத்த கடன் ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடியே 54 லட்சமாகவும், 2022 மார்ச் 31-ல் ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்து 189 கோடியே 29 லட்சமாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 24.98 சதவீதம், மற்றும் 26.69 சதவீதமாக இருக்கும். இவை 15-வது நிதிக்குழுவின் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே உள்ளன.

2021-22-ல் தமிழகத்துக்கான நிகர கடன் வரம்பு ரூ.85,454 கோடியே 4 லட்சமாக கணிக்கப்பட்டிருந்தாலும், தமிழக அரசு ரூ.84,686 கோடியே 75 லட்சம் கடன் வாங்க திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x