Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

ஆர்.எஸ்.புரம் பல அடுக்கு வாகனம் நிறுத்தகத்தில் ‘ஹைட்ராலிக்’ இயந்திரங்கள் பொருத்த அரசூரைச் சேர்ந்த நிறுவனம் தேர்வு

கோவை

கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையில், மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல அடுக்கு வாகனம் நிறுத்தகம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 4.50 ஏக்கர் பரப்பளவில் ரூ.43 கோடி மதிப்பில் கடந்த 2019-ம் ஆண்டுமுதல் மேற்கண்ட திட்டப்பணி, மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 460-க்கும் மேற்பட்ட வாகனங்களை இங்கு நிறுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இத்திட்டத்தில் தற்போது கட்டிடப் பணிகள் முடிவடைந்துவிட்டன. கார்களை ஏற்றி, இறக்கப் பயன்படும் ‘ஹைட்ராலிக்’ இயந்திரங்கள் இன்னும் பொருத்தப்படவில்லை. இந்த இயந்திரங்கள் சீன நாட்டில் இருந்து கொள்முதல் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், அங்கு கரோனா தொற்றால் சிக்கல் எழுந்தது.

இதையடுத்து முதல்கட்டமாக தரைத்தளங்களில் மட்டும் வாகனத்தை நிறுத்தும் வகையில், இம்மாதத்தின் இறுதியில் பல அடுக்கு வாகனம் நிறுத்தகத்தை பயன்பாட்டுக்கு திறக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி நிர்வாக ஆணையர் கா.பாஸ்கரன், பணிகளை விரைந்து மேற்கொள்ள பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘பல அடுக்கு வாகனம் நிறுத்தும் திட்டத்தில் ‘ஹைட்ராலிக்’ இயந்திரங்களை பொருத்த, கோவை அருகேயுள்ள அரசூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தினர், திருவனந்தபுரம் மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணியில் வாகன நிறுத்தகம் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். தவிர, கோவையில் தனியார் மருத்துவமனைகள், ஜவுளி நிறுவனங்களில் இவர்கள் மேற்கண்ட திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளனர். ‘ஹைட்ராலிக்’ இயந்திரங்களை பொருத்தும் பணியை மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கு நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் முதலில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x