Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

காங். அரசு கவிழ்ந்த விவாகரத்தில் எங்களை குறை சொல்ல நாராயணசாமிக்கும், ஸ்டாலினுக்கும் எந்தத் தகுதியும் இல்லை புதுவை அதிமுக செயலாளர் அன்பழகன் ஆவேசம்

புதுச்சேரி

புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்ந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை குறைச்சொல்ல நாராயணசாமிக்கும், திமுக. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எந்தவித தகுதியும் இல்லை என புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலாளரும் சட்டப்பேரவைத் தலைவருமான அன்பழகன் தெரிவித்துள்ளார்.

உப்பளம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின் முதல்வராக இருந்த நாராயணசாமியால், கொண்டு வரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் நேற்று படுதோல்வி அடைந்தது. இதில், உண்மைக்கு புறம்பான சில கருத்துக்களை முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்து வருகிறார். மக்களிடம் அனுதாபம் பெற வழக்கமான பொய்யை கூறி வருகிறார்.

பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு இல்லை. வாக்கெடுப்பு நடக்கும் போதே, அதில் கலந்து கொள்ளாமல் சபையை விட்டு வெளியேறிய காங்கிரஸ் - திமுக உறுப்பினர்களின் உண்மை நிலையை மக்கள் உணர்ந்துள்ளனர். நாராயணசாமி, துணைநிலை ஆளுநரிடம், பதவி விலகுவதாக கடிதம் அளித்தார். சட்டப்பேரவையில் எவ்வளவு கொச்சப்படுத்தி பேச முடியுமோ, அந்த அளவுக்கு சபையில் அவருக்கு பேச பேச்சுரிமை வழங்கப்பட்டது. யாரும் குறுக்கிடவில்லை. அடுக்கடுக்கான பொய்யான தகவல்களை கூறினார்.

சபையை விட்டு வெளியே வந்து சபாநாயகர் முறையான வாக்கெடுப்பை நடத்தவில்லை, சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டார் என்று கூறினார். சபாநாயகர், ‘உங்கள் கட்சியைச் சேர்ந்தவர் தானே?; உங்களால் கொண்டு வரப்பட்ட தீர்மனத்துக்கு ஆதரிக்க யாரும் இல்லாததால், தீர்மானம் தோல்வியடைந்து விட்டது’ என்று சபாநாயகர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் முதல்வரால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்து அரசு கவிழ்ந்தது.

விதைத்ததை அறுக்கிறார்

நாராயணசாமி தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்யவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் பதவி விலகிய போதும், எதிர்க் கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிடலாம் என்ற தைரியத்தோடு இருந்தார். ஆனால், அது நடக்கவில்லை. காங்கிரஸ் - திமுகவில் உழைப்பவர்களுக்கு எந்தத் தேர்தலிலும் சீட்டு வழங்குவதில்லை.

காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததுதற்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? எதிர்க் கட்சிகளை குறைச்சொல்ல நாராயணசாமிக்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எந்த தகுதியும் இல்லை. உங்கள் கட்சியில் நீங்கள் சீட் கொடுத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள்தான் ராஜினாமா செய்துவிட்டு சென்றிருக்கின்றனர். அதனாலேயே ஆட்சி கவிழ்ந்திருக்கிறது. அதற்கு, எதிர்க்கட்சியினர் என்ன செய்ய முடியும்.

‘கடந்த 30 ஆண்டுகளில் அரசியலில் எத்தனை பேரை பழிவாங்கியிருப்போம்’ என்பதை நாராயணசாமி நினைத்துப் பார்க்க வேண்டும். நாராயணசாமி என்ன விதைத்தாரோ அதைத்தான் அறுவடை செய்துள்ளார். அவர் செய்த தவறுகள், தற்போது அவரை திருப்பி அடித்துள்ளது.

காங்கிரஸ் காரர்களின் செயல்படாத தன்மையால் புதுச்சேரியின் வளர்ச்சி 10 ஆண்டு காலம் பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கு நாவடக்கம் தேவை. வரும் சட்டப்பேரவை தேர்தலில், கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தீர்களோ, அதை கூறி வாக்கு கேளுங்கள்.

எதிர்கட்சியினரை பற்றி குறை கூறி வாக்கு கேட்க எதுவுமில்லை. 5 ஆண்டுகாலம் ஆட்சியை நிறைவு செய்ய முடியாத சூழ்நிலையை உருவாக்கியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், முதல்வர் நாராயணசாமியும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அன்பழகன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x