Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் 7664 பேருக்கு ரூ.46.10 கோடி திருமண உதவித்தொகை மாவட்ட ஆட்சியர் தகவல்

கிருஷ்ணகிரியில் சமூக நலத்துறை சார்பில் 100 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். இதில் மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.முனுசாமி பங்கேற்று, 100 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்த 4,512 பெண்கள், பட்டயப் படிப்பு படித்த 3,152 பெண்கள் என மொத்தம் 7,664 பயனாளிகளுக்கு ரூ.27.04 கோடி மதிப்பில் திருமண நிதி உதவி மற்றும் ரூ.19.06 கோடி மதிப்பில் 61,312 கிராம் தங்கம் என மொத்தம் ரூ.46.10 கோடி மதிப்பில் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 2020-21-ம் நிதியாண்டில் மாவட்டத்திலுள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் 2,220 பயனாளிகளுக்கு ரூ.8.44 கோடி மதிப்பில் திருமண நிதி உதவித் தொகை மற்றும் ரூ.8.38 கோடி மதிப்பீட்டில் 17,760 கிராம் தங்கம் என மொத்தம் ரூ.16.82 கோடி மதிப்பில் வழங்கப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், ராஜேந்திரன், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் குப்புசாமி, வேளாண்மை விற்பனை கூட்டுறவு சங்க தலைவர் தங்கமுத்து, ஒன்றிய குழு தலைவர்கள் அம்சா ராஜன், பையூர் ரவி, மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x