Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டன பொதுக்கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் அதானி குழுமத்துக்கு சொந்தமான துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கைகளில் அக்குழுமம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், அதானி குழும துறைமுக விரிவாக்கத்துக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், நேற்று முன்தினம் பழவேற்காடு பகுதியில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:

பிரதமர் மோடியின் நண்பரான அதானி, ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் லாபம் ஈட்டுகிறார். அவர் பணக்காரராக ஆனதற்கு மத்திய அரசும் காரணம். இந்தியாவில் ஒரே நாளில் 6 விமான நிலையங்கள் ஏலம் விடப்பட்டு, அதை அதானி எடுத்துள்ளார். தற்போது துறைமுகங்களையும் அதானி தன்னுடைய நிறுவனங்களாக மாற்றி வருகிறார்.

மக்களுக்கு தானியங்களை கப்பலில் கொண்டு வந்து கொடுப்பதற்காக காட்டுப்பள்ளியில் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படவில்லை. நிலக்கரியை ஆஸ்திரேலியாவில் இருந்து, கப்பலில் காட்டுப்பள்ளிக்கு கொண்டு வருவதற்காகத்தான் இந்த விரிவாக்கம். எனவே, காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறது.

மத்திய அரசு நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட பொதுத் துறை நிறுவனங்களை ஒவ்வொரு பட்ஜெட்டிலும் விற்று வருகிறது. மோடி, அமித் ஷாவால் நடத்தப்படும் பொம்மலாட்ட அரசுதான் தமிழக அரசு. அதானி, அம்பானியால் நடத்தப்படும் கார்ப்பரேட் அரசுதான் மத்திய அரசு.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் பூவுலகின் நண்பர்கள் குழுவை சேர்ந்த சுந்தர்ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும், ’அறம்’ திரைப்பட இயக்குநருமான கோபி நயினார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x