Published : 22 Feb 2021 03:18 AM
Last Updated : 22 Feb 2021 03:18 AM

நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி மகாமக குளத்தில் பிப்.26-ல் மாசி மக ஆரத்தி பெருவிழா

கும்பகோணம்

அகில பாரதீய சந்நியாசி சங்கம் மற்றும் தென்பாரத கும்பமேளா மகாமகம் அறக்கட்டளை சார்பில், கும்பகோணத்தில் மாசி மக ஆரத்தி பெருவிழா பிப்.26-ம் தேதி நடைபெறவுள்ளது.

கும்பகோணத்தில் பிப்.26-ம் தேதி மாசிமகத்தன்று காலை 10 மணிக்கு, அகில பாரதீய சந்நியாசி சங்கம் மற்றும் தென்பாரத கும்பமேளா மகாமகம் அறக்கட்டளை சார்பில் நீர்நிலைகளைப் பாதுகாத்தல், பராமரித்தல், நன்றி தெரிவித்தல் தொடர்பான சொற்பொழிவு, கலந்துரையாடல், கருத்தரங்கம் ஆகியவை காசிராமன் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் சைவ, வீரசைவ, ஆதீன குருமகா சன்னிதானங்கள் மற்றும் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தினர், துறவியர்கள், சாதுக்கள் கலந்துகொண்டு, அருளாசி வழங்க உள்ளனர்.

பின்னர், மாலை 5 மணிக்கு சிவவாத்திய இசைக்கருவிகள், மங்கள வாத்தியம் முழங்க, மகாமக குளத்தை தீர்த்தவலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு ஆதீனங்கள், மடாதிபதிகள், துறவியர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, ஆரத்தி வழிபாடு செய்ய உள்ளனர். அப்போது, குளத்தின் நான்கு கரைகளிலும் திரளான பெண்கள் அகல் தீபமேற்றி வழிபட உள்ளனர். கங்கையில் நடைபெறும் தீப ஆரத்தி போலவே, மகாமக குளத்திலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு, தென்பாரத கும்பமேளா அறக்கட்டளை செயலாளர் வி.சத்திய நாராயணன், பொருளாளர் வேதம்முரளி, ஒருங்கிணைப்பாளர் ராமநாதன், நிர்வாகி சரவணன் மற்றும் சந்நியாசிகள் சங்க மாவட்ட பொறுப்பாளர் சுவாமி கோரக்கர் ஆகியோர் நேற்று திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ல அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசி மட அதிபர் காசிவாசி முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள், சுவாமிமலை கோணக்கரை விவேகானந்த சேவாசமிதி நிறுவனர் பத்மநாப சுவாமிகள் ஆகியோரை சந்தித்து, ஆரத்தி பெருவிழா அழைப்பிதழை வழங்கி, நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x