Published : 21 Feb 2021 03:18 AM
Last Updated : 21 Feb 2021 03:18 AM

குஜராத்தில் உயிரியல் பூங்கா முகேஷ் அம்பானி திட்டம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் தனது பூர்வீக மாநிலமான குஜராத்தில் உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

80 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் எண்ணெய் சுத்திகரிப்பு, தொலைதொடர்பு, இ-காமர்ஸ் மற்றும் ரீடெய்ல் உள்ளிட்ட துறைகளில் கொடிகட்டிப் பறக்கிறது. மேலும் மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் குழு, கால்பந்தாட்ட குழு என விளையாட்டு துறையிலும் தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளது. தற்போது அடுத்தக்கட்டமாக உயிரினங்கள் பாதுகாப்பு தொடர்பான துறையிலும் களம் இறங்குகிறது.

அதன்படி குஜராத் மாநிலத்தில் உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா ஒன்றை அமைக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. குஜராத்தின் ஜாம்நகரில் 280 ஏக்கர் பரப்பளவில் அமையுள்ள இந்த உயிரியல் பூங்கா 2023ல் திறக்கப்படும் என்றும், இதில் உள்ளூர் அரசு நிர்வாகத்துக்கு உதவும் மீட்பு மையம் ஒன்றை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன விவகாரங்கள் பிரிவு இயக்குநர் பரிமல் நத்வானி கூறினார்.

கொமோடோ டிராகன், சிறுத்தைகள், பறவைகள் என 100க்கும் மேலான பல அரிய உயிரினங்கள் இந்தப் பூங்காவில் இடம்பெற உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி பணக்காரர்கள் பலரும் மக்கள் சேவை, விலங்குகள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்குப் பங்காற்றுவது அதிகரித்துவருகிறது. பலருடைய கனவுகளாக இருக்கும் விஷயங்களைப் பெரும்பணக்காரர்கள் எளிதில் செயல் படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற முன்னெடுப்புகள் மூலம் அவர்களின் குடும்பத்துக்கும் நிறுவனத்துக்கும் நற்பெயர் கூடுகிறது என்று கேம்ப்டென் வெல்த் ஆராய்ச்சி இயக்குநர் ரெபக்கா கூச் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x