Published : 20 Feb 2021 03:16 AM
Last Updated : 20 Feb 2021 03:16 AM

25-ம் தேதி முதல் 234 தொகுதிக்கும்விருப்ப மனு பெறுகிறது காங்கிரஸ்

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்ய விருப்ப மனுக்கள் பெறத் தொடங்கியுள்ளன. ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 முதல் மார்ச் 5-ம் தேதி வரை அதிமுக விருப்ப மனுக்களைப் பெறவுள்ளது. திமுக சார்பில் கடந்த 17-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. தேமுதிக, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளும் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான தேதியை அறிவித்துள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 25-ம்தேதி முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கட்சியினரிடமிருந்து 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வருகிற பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 -ம்தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளது. காங்கிரஸ் மாநிலத் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ரூ. 300 கட்டணம் செலுத்தி விண்ணப் படிவத்தைப் பெற்று, பொதுத் தொகுதிகளுக்கு ரூ. 5 ஆயிரம், தனித் தொகுதிகள், பெண்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 500 நன்கொடையாக வரைவோலை மூலம் செலுத்த வேண்டும். விருப்ப மனுவில் கேட்கப்பட்டுள்ள விபரங்களையும் முறையாகப் பூர்த்தி செய்தும், இணைக்கப்பட வேண்டிய இதர விபரங்களை விருப்பமனுவுடன் சேர்த்தும் மார்ச் 5-ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். விருப்ப மனுவுடன் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான் அட்டை நகலை கட்டாயம் இணைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x