Published : 20 Feb 2021 03:16 AM
Last Updated : 20 Feb 2021 03:16 AM

சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்தால் வரவேற்போம்சசிகலாவை சந்தித்த டிடிவி தினகரன் கருத்து

சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எடுத்தால் வரவேற்போம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் நேற்று சசிகலாவை சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தேர்தலில் திமுகவுக்கு அமமுக கவுன்சிலர் ஆதரவளித்ததை சுட்டிக்காட்டி, திமுகவின் பி டீமாக அமமுக செயல்படுவதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியிருக்கிறார். உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளூர் நிலைமைக்கேற்ப ஒரு சிலர் முடிவெடுப்பது சகஜமானது. இதை வைத்து பி டீம் என்று சொல்வது அபத்தமானது.

பொது இடங்களில் தலைவர்களின் சிலைகள் வைக்க அவ்வளவு எளிதில் அனுமதி கிடைப்பதில்லை. ஆனால், மதுரையில் கருணாநிதி சிலை அமைக்க பெருந்தன்மையுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். திமுகவுடன் அதிமுகவினர் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.

நிகழ்காலத்தில் பரதன் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் பற்றி விளம்பரம் செய்துள்ளனர். ஓபிஎஸ் பரதனாக இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017 பிப்ரவரி 5-ம் தேதி சசிகலாவை முதல்வராக தேர்வு செய்யும் வரை சுய விருப்பத்தின்படி பரதனாகவே இருந்தார். அதன்பிறகு தவறான முடிவெடுத்ததால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ராமருக்கு அருகில் இருக்க வேண்டிய பரதர், ராவணனுடன் இருக்கிறார் என்றுதான் சொன்னேன். இப்போது சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்தால் வரவேற்போம்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைப்போம். அதிமுக – அமமுகவை இணைக்க பாஜக தரப்பிலிருந்து எந்த அழுத்தமும் வரவில்லை. இதுபற்றி பாஜகவினர் யாரும் எங்களுடன் பேசவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x