Published : 18 Feb 2021 03:17 AM
Last Updated : 18 Feb 2021 03:17 AM

நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது நாட்டின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்பட வேண்டாம் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

இந்திய மென்பொருள் துறை நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் ஏற்பாடு செய்த மாநாட்டில் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சுயசார்பு பாரதம் மற்றும் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்குகளை எட்டும் நோக்கில் பல்வேறு துறைகளில் தாராளமயமாக்கும் முயற்சிகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்திய வரைபட தகவல்களை தாராளமயமாக்கும் நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன்மூலம் நாட்டின் தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான தொழில் சூழல் பெரிதும் வளர்ச்சிகாணும். மேலும் இந்திய வரைபட தகவல்கள் இதுவரை கட்டுப்பாட்டுக்குள் ஒழுங்குபடுத்தப்பட்டுவர காரணம் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல்தான். ஆனால், தற்போது இந்தியாவின் நம்பிக்கை பெரிதும் அதிகரித்திருக்கிறது. அதை நம்முடைய எல்லைகளில் கண்கூடாகப் பார்க்க முடியும் என்றார்.

இந்திய வரைபட தகவல்கள் தாராளமயமாக்கப்பட்டுள்ளதால், இனி இடம்சார்ந்த தகவல்களை சேகரிக்கவோ, பதிப்பிக்கவோ யாரும் முன் அனுமதி பெற வேண்டியதில்லை. இந்திய நில அளவைத் துறை மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் தகவல்களும் இனி பொது மற்றும் தனியாருக்கு எளிதில் கிடைக்கும்.

மேலும் வரும் ஆண்டுகளில் மென்பொருள் துறையில் சர்வதேச அரங்கில் இந்தியாவை முன்னணி நாடாக உருவாக்க ஐடி நிறுவனங்கள் உறுதி மேற்கொள்ள வேண்டும்.

இந்திய வரைபடத் தகவல்களை தாராளமயமாக்குவதன் மூலம் இந்தத் துறையின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு உயரும், 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x