Last Updated : 14 Feb, 2021 03:17 AM

 

Published : 14 Feb 2021 03:17 AM
Last Updated : 14 Feb 2021 03:17 AM

முதல் நாளில் ரோஹித் சர்மா சதம் விளாசல் இந்திய அணி 300 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்து அணிக்கு 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் நாளில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான ரோஹித் சர்மா சதம் விளாசினார்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷபாஸ் நதீம், வாஷிங்டன் சுந்தர், பும்ரா ஆகியோருக்கு பதிலாக அக்சர் படேல், குல்தீப் யாதவ், மொக மது சிராஜ் களமிறங்கினர். 50 சதவீத ரசிகர்கள் போட்டியை காண அனுமதிக்கப்பட்டு இருந்ததால் இரு அணியும் உற்சாகமாக களமிறங்கின.

இந்திய அணி பேட்டிங்கை தொடங்கிய நிலையில் ஷுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆலி ஸ்டோன் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். தொடாந்து புஜாரா 21 ரன்களில் ஜேக் லீச் பந்தில் வெளியேறினார். 2-வது விக் கெட்டுக்கு ரோஹித் சர்மாவுடன் இணைந்து புஜாரா 84 ரன்கள் சேர்த்தார்.

கேப்டன் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காத நிலையில் மொயின் அலி பந்தில் போல்டானார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியை டக் அவுட்டில் வெளி யேறச் செய்த முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் மொயின் அலி.

இதன் பின்னர் அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மாவுடன் இணைந்து இன்னிங்ஸை கட்டமைத்தார். பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி ஓவர்களில் சிக்ஸரை பறக்கவிட்ட ரோஹித் சர்மா 130 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் தனது 7-வது சதத்தை அடித்தார்.

ரோஹித் சர்மா 231 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகளுடன் 161 ரன்கள் எடுத்த நிலையில் ஜேக் லீச் பந்தை ஸ்கொயர் லெக் திசையில் அடித்த போது மொயின் அலியிடம் கேட்ச் ஆனது. 4-வது விக்கெட்டுக்கு ரோஹித் சர்மா, ரஹானேவுடன் இணைந்து 162 ரன்கள் சேர்த்தார். சிறிது நேரத்தில் ரஹானே 149 பந்துகளில், 9 பவுண் டரிகளுடன் 67 ரன்கள் எடுத்த நிலையில் மொயின் அலி பந்தில் போல்டானார். தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் 13 ரன்களில் ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழந்தார்.

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 88 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. ரிஷப் பந்த் 56 பந்துகளில், 5 பவுண் டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன் களும், அறிமுக வீரரான அக்சர் படேல் 5 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி சார்பில் மொயின் அலி, ஜேக் லீச் ஆகி யோர் தலா 2 விக்கெட்களை கைப் பற்றினர். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளை யாடுகிறது இந்திய அணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x