Published : 14 Feb 2021 03:18 AM
Last Updated : 14 Feb 2021 03:18 AM

கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு பணி தொடக்கம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை

சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொல்லியல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள 7-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் பழனிசாமி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கீழடி கிராமத்தில் உள்ள பள்ளிச்சந்தை திடலில் 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொல்லியல் மேட்டில் இந்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த2014-17 காலகட்டத்தில் 7,818 தொல்பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு கீழடியில் சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டன.

இதன் அடிப்படையில், தமிழகதொல்லியல் துறை 2017-18 ஆண்டில் நடத்திய 4-ம் கட்ட அகழாய்வில் 5,820 தொல்பொருட்கள், பழந்தமிழரின் கட்டுமானப் பகுதிகள் வெளிப்படுத்தப்பட்டன. தொடர்ந்து, 2018-19 ஆண்டு நடந்த 5-ம் கட்டஅகழாய்வில் பல்வேறு வடிவிலான செங்கல் கட்டுமானங்கள், செங்கலால் கட்டப்பட்ட திறந்த நிலையிலான வாய்க்கால், மூடிய நிலையில் உள்ள வடிகால், சுருள் வடிவிலான சுடுமண் குழாய் போன்ற வடிகால் அமைப்புகள் கண்டறியப்பட்டன. சுமார் 900 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. 2019-20 ஆண்டு நடந்த 6-ம் கட்டஅகழாய்வுப் பணிகளில் 2,672தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, கீழடி மற்றும் அதை சுற்றியுள்ள மணலூர்,கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் 7-ம் கட்டமாக தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளது. இப்பணியை முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

சுற்றுலா, அறநிலையத் துறை

மேலும், தமிழக சுற்றுலா துறை, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.8.59 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், படகு இல்லங்களுக்கு ரூ.2.66 கோடியில் மிதிபடகுகள், விசைப் படகு,விரைவு படகுகள், வாட்டர் ஸ்கூட்டர் ஆகியவற்றை வழங்கினார்.

சுற்றுலா துறை சார்பில் இந்தியமொழிகள் மற்றும் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மனி, சீனம், ஸ்பானிஷ், ஜப்பான் ஆகிய வெளிநாட்டு மொழிகளில் 60 நிமிட சுற்றுலா விளம்பர குறும்படங்கள் அடங்கிய குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த குறுந்தகடு மற்றும் சுற்றுலாதலங்களை பிரபலப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட காலப்பேழை புத்தகங்களை முதல்வர் வெளியிட்டார்.

சுற்றுலா தலங்களில் முன்பதிவுக்காக ரூ.1.32 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள கைபேசி செயலியையும் (Tamilnadu Tourism) பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார். உதவி சுற்றுலா அலுவலர் நிலை-2 பணியிடத்துக்கு டிஎன்பிஎஸ்சியால் தேர்வு செய்யப்பட்ட 20 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் 2019-20 நிதியாண்டுக்கான பங்கு ஈவுத்தொகை ரூ.3.13 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார். சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திறன் மேம்பாடுமற்றும் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டதற்கான தரச் சான்றிதழை முதல்வரிடம் அமைச்சர் நடராஜன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

மத்திய அரசின் தேசிய பால விருதுடன் ரூ.15 ஆயிரத்துக்கான கிஸான் விகாஸ் பத்திரங்கள், சான்றிதழ்கள், புத்தகங்கள் பெற்று, தமிழகத்துக்கு பெருமை சேர்த்த 25 விருதாளர்களுக்கு, தமிழக அரசின் பாராட்டுத் தொகை ரூ.15 ஆயிரத்துக்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார். இதில் அமைச்சர்கள், தலைமைச் செயலர், துறை செயலர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x