Published : 13 Feb 2021 03:10 AM
Last Updated : 13 Feb 2021 03:10 AM

நீண்டகால வளர்ச்சிக்கு வித்திடும் ஊக்க சலுகைகள் பட்ஜெட்டில் உள்ளன நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

புதுடெல்லி

வரும் நிதி ஆண்டுக்காக தாக்கல்செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் நீண்ட கால வளர்ச்சிக்கு வித்திடும் ஊக்க சலுகைகள் பல இடம்பெற்றுள்ளன என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நேற்று அவர் பதிலளித்தபோது கூறியதாவது: கரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 130 கோடிமக்களின் லட்சியத்தை பூர்த்திசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டதுதான் ஆத்மநிர்பார் பாரத் திட்டம். நீண்ட கால அடிப்படையில் தொலை நோக்குதிட்டமாகஇந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டி ருந்தாலும், குறுகிய காலத்திற்கும், நடுத்தர காலகட்டத்திலும் பயன் தரும் வகையிலான அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன என்று அவர் கூறினார்.

நீண்டகால அடிப்படையிலான திட்டங்கள் அனைத்துமே ஸ்திரமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இது வேகமாக வளரும் இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகவும் அவசியமானதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சிகள் ஏழைகள் விரோத அரசு என்று கூறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளன. ஏழை மக்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. ஆனாலும் பணக்காரர்களுக்கு ஆதரவான அரசு என்றும் ஏழைகள் விரோத அரசு என்றும் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றன. தற்போதைய சூழலில் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் அரசு கவனம் செலுத்துவதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால் கரோனா பரவலுக்குப் பிறகு அத்தகைய நிலைப்பாட்டிலிருந்து அரசு மாறி மக்கள் நலத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. வளர்ச்சியை பாதிக்காத வகையில் நிதிப் பற்றாக்குறை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தாராளமாகநிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட் டுள்ளது.

இப்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு யதார்த்தமான முறையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கும் வேலையில்லாதவர்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில் பட்ஜெட்டில் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து சமூக மக்களையும் ஒன்றிணைத்து அதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x