Published : 12 Feb 2021 03:16 AM
Last Updated : 12 Feb 2021 03:16 AM

12 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை மீண்டும் தொடங்குவது அரசியல் மோசடி முதல்வர் பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்

திமுக ஆட்சியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை இப்போது பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக அறிவித்திருப்பது அரசியல் மோசடி என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கருணாநிதி முதல்வராக இருந்தபோது, மாநிலத்துக்குள் ஓடும் ஆற்று மிகை நீரை, வறண்டநிலையில் உள்ள ஆற்றுப் படுகைகளுக்கு கொண்டு செல்வதற்காக தாமிரபரணி -கருமேனியாறு, காவிரி - குண்டாறு, தென்பெண்ணை - செய்யாறு இணைப்புத் திட்டங்களை அறிவித்தார். இந்த 3 திட்டங்களில் முதல்கட்டமாக தாமிரபரணி - கருமேனியாறு, காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்த கருணாநிதி, அதற்கான நிதியையும் ஒதுக்கினார்.

தாமிரபரணி - கருமேனியாறு இணைப்பு திட்டத்தை 3 கட்டங்களாக பிரித்து டெண்டர் விடப்பட்டு, அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டன. என்றைக்கோ முடிந்திருக்க வேண்டிய அந்தப் பணிகள், அதிமுக ஆட்சியில் முடியவில்லை. கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் என்பதால் இதில்அதிமுக அரசு அக்கறை காட்டவில்லை. ஆனாலும், திட்டத்தைகைவிட முடியாமல், சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை விவாதம்வரும்போதெல்லாம், இத்திட்டத்துக்காக நிலம் கையப்படுத்த ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினர். காவிரி - குண்டாறு - தாமிரபரணி - கருமேனியாறு திட்டங்கள் 12 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 2009-ம் ஆண்டே தொடங்கப்பட்டது.

நீண்ட நெடிய வரலாறு படைத்த திட்டங்களில் ஒன்றான காவேரி - குண்டாறு திட்டத்தை, வரும் 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என்ற செய்தி பார்த்து ஆச்சரியம் அடைந்தேன்.

திமுக ஆட்சியில், 2009-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு, அதிமுக ஆட்சியில் மெத்தனமாக நடந்துவரும் ஒரு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைப்பார் என்று அதிமுக அரசு ஏற்பாடு செய்வது அரசியல் மோசடியாகும். கடந்த 10 ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வரும் அதிமுக அரசு. இன்று பிரதமரையே ஏமாற்றப் பார்க்கிறது. முதல்வர் பழனிசாமி அரசு ஏமாற்ற பார்க்கிறது என்றால், பிரதமர் எப்படி ஏமாறுகிறார் என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x