Published : 11 Feb 2021 03:13 AM
Last Updated : 11 Feb 2021 03:13 AM

புதுச்சேரியில் துக்ளக் தர்பார் நடத்தும் ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வேண்டும் குடியரசுத் தலைவரிடம் நாராயணசாமி முறையீடு

குடியரசுத் தலைவரை சந்தித்து கிரண்பேடியை திரும்பப் பெறக் கோரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தினார். புதுச்சேரியில் கிரண்பேடி துக்ளக் தர்பார் நடத்துவதாக 4 பக்க புகார் மனுவையும் அளித்துள்ளார். மேலும், இரு அமைச்சர்களும் தனித்தனியாக தங்கள் துறைகளில் கிரண்பேடியின் தலையீடு தொடர்பாக புகார்களை அளித்தனர்.

புதுவை காங்கிரஸ் அரசு எடுத்து வரும் கொள்கை முடிவுகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடுத்து வருவதாக முதல்வர்நாராயணசாமியும், அமைச்சர்களும் இந்த ஆட்சியின் தொடக்கம் முதலே குற்றம்சாட்டி வருகின்றனர். மக்கள் நலத் திட்டங்களை முடக்குவதால் மாநில வளர்ச்சி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே, கிரண்பேடியைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மேலும் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தினர். மத்திய அரசிடம் இருந்து கிரண்பேடிக்கு எதிரான எந்த நடவடிக்கையும் இதுவரையிலும் இல்லை.

இதையடுத்து கிரண்பேடியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் வகையில், புதுவையில் 30 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இந்நிலையில் நேற்று காலைடெல்லியில் குடியரசுத் தலைவர்மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தாமி,மக்களவை உறுப்பினர் வைத்தி லிங்கம் ஆகியோர் சந்தித்தனர்.

4 பக்க புகார் மனு

அப்போது முதல்வர் நாராயணசாமி, கிரண்பேடியை திரும்பப் பெறக் கோரி பொதுமக்களிடம் பெற்ற கையெழுத்து பிரதிகளைவழங்கினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கிரண்பேடிஎந்த வகையில் இடையூறு விளைவிக்கிறார் என்பதை விளக்கி கூறினார். அது தொடர்பாக 4 பக்கபுகார் மனுவையும் அளித்தார்.

அதில், “துணைநிலை ஆளுநர் கிரண்பேடி துக்ளக் தர்பார் நடத்துகிறார். மக்கள் பிரதிநிதிகளை மக்கள் பிரச்சினைகளுக்காகக் கூட சந்திப்பதில்லை. ராஜ்நிவாஸை சுற்றி தடுப்புகள் அமைத்து சாலைகளை மூடி மக்கள் செல்ல தடை விதித்துள்ளார். பாரதி பூங்கா ஒரு மாதமாக மூடியுள்ளது. மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், சட்டப்பேரவை பகுதிகளுக்கு மக்கள் செல்வதில் சிரமம்உள்ளது. மத்திய ராணுவப்படையை குவித்துள்ளார். 144 தடை உத்தரவையும் பிறப்பிக்க வைத்துள்ளார். காரைக்கால் சனிப்பெயர்ச்சி விழா நடத்த இடையூறாக இருந்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு தரும் விவகாரம் தொடங்கி பல விஷயங்களிலும் அரசுக்குவிரோதமாகவே செயல்பட்டுள்ளார். பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் கூட இதுபோல் மோசமாக, மக்களை அடிமைகள் போல் நடத்தவில்லை. அதனால் குடியரசுத் தலைவர் இப்பிரச்சினையில் தலையிட வேண்டும். துணைநிலை ஆளுநரை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும். அப்பதவியின் கவுரவத்தை நிலைநிறுத்துங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

குடியரசுத் தலைவருடன் நடந்த சந்திப்பு பற்றி நாராயணசாமியிடம் தொலைபேசியில் கேட்டதற்கு, “மக்கள் நலத்திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களை கிரண்பேடி தடுத்துநிறுத்துவதை குடியரசுத் தலைவரிடம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளோம். அதிகார துஷ்பிரயோகம் செய்வது குறித்தும் விளக்கினோம்”என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x